

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக மடோனா செபஸ்டின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'ஆண்டவன் கட்டளை', 'றெக்க' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தில் டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தில் கார்ப்பரெட் நிறுவன ஊழியராக விஜய் சேதுபதியும், கார்ப்பரெட் நிறுவனத்துக்கு ஆட்கள் எடுத்து அனுப்பும் முகவராக டி.ராஜேந்தரும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், நாயகியாக மடோனா செபஸ்டின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி - மடோனா இருவரும் முன்னதாக 'காதலும் கடந்து போகும்' படத்தில் இணைந்து நடித்தார்கள்.
இப்படத்தின் கதையை எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ்-பாலகிருஷ்ணன்), கே.வி.ஆனந்த், பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து ஆகியோர் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்.