Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM

இது கதிர்வேலன் காதல்: திரை விமர்சனம்- இந்து டாக்கீஸ் குழு

ஆஞ்சநேய பக்தனாக இருக்கும் நாயகன் எப்படிக் காதலில் விழுந்து, தடைகளை மீறி வெல்கிறான் என்பதே ‘இது கதிர்வேலன் காதல்’

கதிர்வேலன் (உதயநிதி ஸ்டாலின்) மதுரையில் வசிக்கிறான். காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அக்காவுக்கும் (சாயா சிங்), மாமாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கக் கோயம்புத்தூர் வருகிறான்.

கோவையில் பவித்ராவை (நயன்தாரா) பார்க்கிறான். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன் என்று சொல்லிக்கொள்ளும் ஆஞ்சநேய பக்தன் பவித்ராவின் அழகில் மயங்கி, காதலில் விழுகிறான்.

இந்தக் காதலுக்கு மூன்று தடைகள். ஒன்று பவித்ராவுடன் கெட்ட நோக்கத்துடன் பழகும் நண்பன் கௌதம் (சுந்தர்). கதிரின் அப்பாவுக்குக் காதல் என்றாலே பிடிக்காது. பவித்ராவின் அப்பாவுக்கும் கதிரின் மாமாவுக்கும் ஜென்மப் பகை. இந்தத் தடைகளை மீறிக் கதிரின் காதல் நிறைவேறியதா?

ஆகிவந்த பாதையிலேயே ஓடுவதால் கதிர்வேலன் காதலில் புதிதாக எதுவும் இல்லை. அக்காவுக்கும் அவரது கணவருக்கும் பிரச்சினை, அவருக்கும் எதிர் வீட்டிற்கும் பிரச்சினை, காதலிக்கு அவள் நண்பனால் பிரச்சினை என ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் எதுவும் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

நண்பனின் காமம், அப்பாவின் கோபம், மாமாவின் பகை என ஏகப்பட்ட முஸ்தீபுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் எல்லாமே சப்பென்று ஆகிவிடுகின்றன. எதிர் வீட்டுப் பெரியவருக்கும் மாமாவுக்கும் இடையே இருக்கும் சண்டைக்கான காரணம் வெளிப்படும்போது பார்வையாளர்கள் பொறுமையின்மையின் உச்சிக்கே போகிறார்கள்.

படத்தில் கொடுக்கப்படும் முஸ்தீபுக்கு முழு நியாயம் செய்திருப்பது நயன்தாரா மட்டும்தான். அவர் அழகைப் பற்றிப் பெரிதாக பில்ட் அப் கொடுக்கப்படுகிறது. அவர் திரையில் தோன்றும்போது பார்வையாளர்கள் உற்சாகமாக விசிலடித்து ஆரவாரம் செய்கிறார்கள். நயன்தாராவின் தோற்றப் பொலிவும் நடிப்பும் படத்தை ஓரளவேனும் காப்பாற்றுகின்றன.

உதயநிதி நடிப்பில் கொஞ்சம் தேறியிருக்கிறார். நடனத்தில் அதை விடவும் அதிகமாகத் தேறியிருக்கிறார். ஆனால் எந்தச் சவாலும் இல்லாத வேடங்களின் மூலம் நல்ல நடிகனாக உருப்பெற முடியாது என்பதை அவர் புரிந்துகொள்வது நல்லது.

சுந்தர் ராம், சாயா சிங், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஜெயபிரகாஷ், மயில்சாமி ஆகியோர் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள். கொடுக்கப்பட்ட வேலைதான் சரியில்லை.

சந்தானம், உதயநிதியின் நடிப்பை முடிந்தவரை கலாய்க்கிறார். அவ்வப்போது சிரிப்பு மூட்டுகிறார். அடிக்கடி கண்ணாடியைத் தூக்கிவிட்டுக்கொண்டு ‘காதல்ங்கிறது’ என்று வசனம் பேசும்போது பார்வையாளர்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் கேட்கும்போது நன்றாக இருக்கின்றன. ஆனால் மனதில் பதிய வில்லை. பின்னணி இசை படத்தின் சூழலோடு பொருந்தியிருக்கிறது. பாடல் மெட்டுகளிலும் பின்னணி இசைத் துணுக்குகளிலும் எங்கேயோ கேட்ட ஞாபகங்கள் வந்து தொலைக்கின்றன.

படத்தின் சிறப்பம்சம் பாலசுப்பிரமணியெமின் ஒளிப்பதிவு. என்ன தேவையோ அதை மிகவும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.

ஒரு இடத்தில் சந்தானம், ‘இன்னும் எவ்வளவு ப்ளாஷ்பேக் வைச்சிருக்க.. ஃபுல்லா எடுத்துக் கொட்டு’ என்று உதயநிதியிடம், கூறுவார். படம் பார்ப்பவர்கள் இயக்குநரைப் பார்த்துக் கூற வேண்டியது இது.

இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன், உதயநிதி இருவருக்கும் இது இரண்டாவது படம். அவரவரின் முதல் படம் பெற்ற பெயரை இந்தப் படத்தில் தக்கவைத்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள்.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x