

'இவன் வேற மாதிரி' படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
விக்ரம்பிரபு, சுரபி, கிருஷ்ணவம்சி உள்ளிட்ட பலர் நடிக்க, 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கிய படம் 'இவன் வேறமாதிரி'. லிங்குசாமி தயாரித்துள்ள இப்படத்தினை யு.டிவி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 13ம் தேதி வெளியான இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் ரஜினிக்கு என்று இப்படத்தினை பிரத்யேகமாக திரையிட்டு காட்டியிருக்கிறார்கள். படத்தினை பாராட்டி ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில், "'இவன் வேற மாதிரி' படத்தைப் பார்த்தேன். ஒரு கிளாஸான ஆக்ஷன் படம். இதுவரைக்கும் எந்த படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சகட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் படம் வெற்றிக்கு என் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.