

தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்த புகாரை நடிகை ராதா வாபஸ் பெற்றார். அவரின் முடிவு போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
'சுந்தரா டிராவல்ஸ்' உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது நடிகை ராதா பரபரப்பு புகார் அளித்தார்.
தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி தொழிலதிபர் பைசூல் 6 ஆண்டுகள் தன்னோடு குடும்பம் நடத்தியதாகவும், திருமணம் செய்ய மறுப்பதாகவும், ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் அப்புகார் மனுவில் கூறியிருந்தார் நடிகர் ராதா.
அவரது புகாரை பெற்றுக்கொண்ட வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள். இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க தொழிலதிபர் பைசூல் 3 முறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 3 முறையும் அம்மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
பைசூலை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்று பேட்டியளித்த ராதா, நேற்று இரவு திடீரென்று பைசூல் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்றார்.
தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாகவும், வழக்கை கைவிட வேண்டும் என்று மனு எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் போலீசார், அதனை நீதிமன்றத்தில் கூறுமாறு தெரிவித்துள்ளனர்.
ராதாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.