நான் கடந்து வந்த பாதை: பவர் ஸ்டார் சீனிவாசன்

நான் கடந்து வந்த பாதை: பவர் ஸ்டார் சீனிவாசன்
Updated on
1 min read

மு பு ஜாக்கிரதை' என்னும் குறும்படம் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘மு பு ஜாக்கிரதை’ என்ற குறும்படத்தை சந்துரு இயக்கி நடித்து திரையிட்டார். நிகழ்ச்சியில் ‘பருத்தி வீரன்’ சரவணன், நடிகை வடிவுக்கரசி உள்ளிட்ட திரையுலகத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பேசும்போதும் “ 'லத்திகா' படம் உண்மையிலேயே பத்து நாள்தான் ஓடியது. அப்படத்தை 100 நாளைக்கு மேல ஓட வைக்கலாம்னு சொன்னாங்க. எப்படின்னு கேட்டேன், ஒரு குவார்ட்டர், பிரியாணி பொட்டலமும் போதும்னு சொன்னாங்க. அப்படி கொடுத்து கொடுத்தே படத்தை 225 நாள் ஓட வச்சேன். 100வது நாள் விழா கொண்டாடனும்னு சொன்னாங்க, அதுக்கும் செலவழிச்சேன்.

அப்புறம் ‘ஆனந்த தொல்லை’ படத்தை தினமும் 8 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணினால், படத்தை எடுத்துடலாம்னு சொல்லிட்டு ஒருத்தர் வந்தார். அப்புறம் அது தினமும் மூணு லட்ச ரூபா செலவுல போய் நின்னுச்சி. ஒரு வழியா படத்தை முடிச்சிட்டு, ரிலீஸ் பண்ண ரெடியாகிட்டேன்.

நடுவுல என்னை கைதுலாம் பண்ணாங்க, நான் எங்கயும் ஓடி ஒழியவில்லை. கூப்பிட்டால் வரப்போறன். இப்பவும் என்னை நிறைய பேர் நடிக்கக் கூப்பிடறாங்க, ஆனால், சம்பளத்தைக் கேட்டால் உங்க கிட்ட இல்லாத பணமா சார்னு கேக்கறாங்க. நிஜமா என்கிட்ட பணமே இல்லை. அதனால நடிக்க வாய்ப்புக் கொடுத்தால் கண்டிப்பா சம்பளமும் கொடுங்க” என்றார் சீனிவாசன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in