

சிம்பு - கெளதம் மேனனின் 'சட்டென்று மாறுது வானிலை' தலைப்பிற்கு பிரச்சினை ஏற்பட்ள்ளது. இதனால் படத்தலைப்பினை மாற்றவிருக்கிறார்கள்.
சிம்பு - கெளதம் மேனன் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. படத்திற்கு 'சட்டென்று மாறுது வானிலை' என்று தலைப்பை அறிவித்தார்கள்.
ஆனால், அத்தலைப்பிற்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. எதனால் பிரச்சினை என்று விசாரித்த போது கிடைத்த தகவல்கள் :
படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்றபோது, 'சட்டென்று மாறுது வானிலை' என்று தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசித்து, அத்தலைப்பிற்கு விண்ணப்பித்தார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு தலைப்பிற்கு விண்ணப்பித்தால், அத்தலைப்பு ஏற்கனவே பதிவாகி இருக்கிறதா என்று ஆராய்ந்து அவர்கள் ஒப்புக் கொள்வது வரை காத்திருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் இருந்து, இத்தலைப்பை வைத்து கொள்ளலாம் என்று கூறியவுடன் தான் அறிவிக்க வேண்டும்.
ஆனால், கெளதம் மேனன் அதுவரை காத்திருக்காமல் தலைப்பு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அறிவித்து விட்டார். ஆனால், அவர் ஆசைக்கு சட்டென்று மாறியது வானிலை.
ஏற்கனவே, 'சட்டென்று மாறுது வானிலை' என்று ஒரு படத்திற்கு தலைப்பிட்டு, படப்பிடிப்பு முடிவடைந்து, சென்சார் முடிந்து, வரிச்சலுகையும் வாங்கியிருக்கிறார்கள். இப்படத்தினை ரவிராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி இருக்கிறார்.
அப்படத்திற்கு சென்சார் முடிந்து, வரிச்சலுகையும் வாங்கிவிட்டதால் சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார் கெளதம் மேனன்.