

வெங்கட்பிரபுவின் படங்களில் தலைகாட்டும் காமெடி நடிகராகவே பிரேம்ஜியை அறிந்த பலருக்கு, அவர் ஒரு இசையமைப்பாளர் என்பது தெரியாது. ஆனால், அப்பா கங்கை அமரனின் வழியைப் பின்பற்றி அவரும் 5 தமிழ்ப் படங்கள், ஒரு தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவருடைய லேட்டஸ்ட் படம், அவருடைய நண்பர் விஜய் வசந்த் நடிக்கும் "என்னமோ நடக்குது".
குட்டி ரேவதி எழுதியுள்ள "ஆகாயம் வீழ்கிறதே" என்ற முதல் பாடலை பிரேம்ஜியே பாடியுள்ளார். பியானோவின் வருடலுடன் தொடங்கும் அந்தப் பாடல், உத்வேகம் தரும் இனிமையான ஒன்று. ஆனால், இடையிடையே வரும் அந்த முரட்டுக் குரல் தொந்தரவு செய்தாலும் இந்தப் படத்தின் ஹிட் பாடலாக இது மாறலாம்.
யுகபாரதி 2 பாடல்களை எழுதியிருக்கிறார். "மணி மணி" பாடலை ரஞ்சித்தும் பிரேம்ஜியும் பாடியிருக்கின்றனர். தாளம் போட வைக்கும் பாடல். யுகபாரதி மற்றொரு பாடலான "ஓரக்கண்ண சாச்சு நீ"யை ஹரிசரண்தான் பாடியுள்ளாரா என்று சந்தேகம் வருகிறது. வழக்கமாக ஹைபிட்ச் பாடல்களைப் பாடும் ஹரிசரண், இந்த மாறுபட்ட பாடலைப் பாடியுள்ளார்.
"வா இது நெத்தியடிதான்" பாடலை மனோவுடன் இணைந்து பாடியிருப்பவர் எல்.ஆர்.ஈஸ்வரி. "கலாசலா"வுக்குப் பிறகு அவர் பாடியுள்ள ஹாட் பாடல். அநேகமாக இந்தப் படத்தின் குத்துப் பாடல் தேவையை இது நிறைவு செய்யும்.
விவேகா எழுதியுள்ள "மீச கொக்குதான்" பாடலை விஜய் யேசுதாஸ், சைந்தவியுடன் இணைந்து பாடியுள்ளது சரண்யா பொன்வண்ணன். கிராமத்து மெட்டில் அமைந்த இந்தப் பாடல் ஓகே ரகம்.
சில பாடல்கள் பழைய மெட்டுகளை ஞாபகப்படுத்து கின்றன. அதேநேரம், பிரேம்ஜியின் அக்மார்க் அடையாளமான ராப் இசையை இந்த ஆல்பத்திலும் பார்க்க முடிகிறது. பல பாடல்கள் கவர்கின்றன. இவ்வளவு திறமை இருந்தும் ஏன் பிரேம்ஜியை இசையமைப்பாளராக பலரும் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது புரியவில்லை.