

'முள்ளும் மலரும்' இயக்குநர் மகேந்திரன் மீண்டும் ஒரு படத்தினை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.இப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார் இளையராஜா.
'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்', 'ஜானி' ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ உள்ளிட்ட பல எதார்த்தமான படங்களை இயக்கியவர் மகேந்திரன். 2006ம் ஆண்டு வெளியான 'சாசனம்' திரைப்படம் தான் இவரது இயக்கத்தில் இதற்கு முன்னர் வெளிவந்த படம். இவரது பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து இருப்பார் நண்பரான இளையராஜா.
மகேந்திரன் - இளையராஜா என்றாலே பாடல்கள் எல்லாமே பெரும் வரவேற்பை பெறும். அந்த வகையில் தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. முதன் முறையாக டிஜிட்டலில் இப்படத்தினை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் மகேந்திரன்.
புதுமைப்பித்தனின் சிறுகதையை படமாக்க இருக்கிறார் மகேந்திரன். இப்படத்திற்கான இசைப்பணிகளை இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறார் இளையராஜா. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, காசி விஸ்வநாதன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
மார்ச் மாதம் முதல் கோயம்புத்தூருக்கு அருகே உள்ள கிராமத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து, மே மாதம் படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.