

விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இருமுகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.
விக்ரம் முதலில் தாடி வைத்து 'ரா' உளவுப் பிரிவு ஏஜெண்ட்டாக நடிக்கும் காட்சிகளோடு மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை, காஷ்மீர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை நடத்தப்பட்டு இருக்கிறது.
'ரா' உளவுப் பிரிவு ஏஜெண்ட் மட்டுமன்றி, திருநங்கை கதாபாத்திரத்திலும் விக்ரம் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
ஆக்ஸ்ட் 2ம் தேதி சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், செப்டம்பர் 1ம் தேதி படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.