

'மான் கராத்தே' படத்தில் நாயகனாக நடித்த சிவகார்த்திகேயன் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனும்கொடுக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் மற்றும் பலர் நடித்த படம் 'மான் கராத்தே'. திருக்குமரன் இயக்கிய இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்து இருந்தார். படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பது:
"நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளை பெற்றுள்ளேன். தற்போது குத்துச்சண்டை பயிற்சி குழு நடத்தி வருகிறேன்.
சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ’மான் கராத்தே’ படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் குத்துச்சண்டையை இழிவுபடுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெற வில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல்.
எனவே ’மான் கராத்தே’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். ’மான் கராத்தே’ படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அம்மனுவில் கூறியிருந்தார்.
இம்மனு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.