

மிக அபூர்வமான படங்கள் ஆரவாரம் இல்லாமல் வெளியாகின்றன. மெய்யழகியும் அப்படித்தான். ஒப்பனையுமின்றி, ஒப்பேத்தலுமின்றி ஒரு அக்காள் - தம்பியின் பாசப்போராட்டத்தை உயிரோட்டத்துடன் முன்வைத்திருக்கும் படம். படம் முழுவதும் கதாபாத்திரங்களை மறைந்திருந்து படம் பிடித்தமாதிரி மிகைகள் குறைந்த யதார்த்தம்.
தம்பியை ஈன்ற அம்மா மரணத்தைத் தழுவ, தாயின் இடத்தை நிரப்புகிறாள் அக்கா. ஆட்டிசம் குறைபாட்டுடன் வளரும் தம்பியைக் காப்பாற்ற வாழை இலைகளை உணவுவிடுதிகளுக்கு விற்றுத் தம்பியைக் காக்கும் நேர்மையான கிராமத்துப் பெண்மை. திருமணம் செய்துகொண்டால், தம்பியைப் பார்த்துக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என அஞ்சி வாழும் இந்த அபலைப் பெண் மீது அந்த ஊரின் பெரிய மனுசனாக இருக்கும் பண்ணையாருக்குக் காதல். ஆனால் பண்ணையாரின் கார் ஒட்டுநராக இருக்கும் இளைஞனின் காதலை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் தம்பியால் காதலனை இழக்கவேண்டிய சூழல் வரும்போது அக்காள் என்ன செய்தாள் என்பதுதான் இந்த மெய்யழகியின் வாழ்க்கை..
கதாபாத்திரங்களை மிகையில்லாமல் உருவாகியவிதம், காட்சிகளை நமக்கு அருகாமையில் நிகழ்வதுபோலச் சித்தரித்த விதம், இரண்டிலுமே நேர்த்தி காட்டியிருக்கும் அறிமுக இயக்குனர் ஆர்.டி.ஜெயவேலுவை நம்பிக்கையூட்டும் இளம் இயக்குனர்களில் ஒருவராக அடையாளம் காண முடிகிறது.
பொழுதுபோக்கை நாடிவரும் பெரும்பான்மை ரசிகர்களுக்கு, உணர்ச்சிபூர்வமான ஒரு கதையைச் சொன்னாலும், அதை விறுவிறுப்பாகச் சொல்ல முடியும் என்று திரைக்கதையிலும் தொய்வில்லாத தன்மையைக் கடைசிவரை கையாண்டிருக்கிறார் இயக்குனர். இந்தக்கதையில் நகைச்சுவையைத் தேவையில்லாமல் நுழைக்காமல் இருந்ததற்காகவே இயக்குனரைத் தனியாகப் பாராட்டலாம்.
மெய்யழகியை மணமுடிக்க, தனது மனைவியை வைத்தே காய் நகர்த்தும் பண்ணையாரும், கணவன் சொன்னால் அதில் உண்மை இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பும் அவரது மனைவி கதாபாத்திரமும் கதையை இழுத்துச் செல்வதில் கன கச்சிதம். தீடீர் காதலனாகும் கார் ஓட்டுனர் அர்ஜூன் கதாபாத்திரத்திலும் மிகையில்லை.
முதன்மைக் கதாபாத்திரமாக நடித்தவர்களில் அக்கா ’மெய்யழகியாக’ நடித்திருக்கும் ஆரோகணம் படப்புகழ் ஜெய்குஹானி அருமையான நட்சத்திரத் தேர்வு. துளி ஒப்பனை இல்லாமல் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கணவனைத் திருமணம் செய்துகொண்டால் எல்லாமே கிடைக்கும் என்று சாப்பிட அழைக்கும் பண்ணையாரின் மனைவியிடம் “எச்சில் இலைல சாப்பிடக் கூப்பிடுறீங்களே... நியாயமாக்கா..?” என்று கேட்கும் இடம் உட்படக் கடைசிவரை கண்ணியம் கெடாமல் இருக்கிறது இவரது கதாபாத்திரம்.
இவர்தான் மொத்தக் கதையையும் தோளில் சுமக்கிறார் என்றால், ஆட்டிசம் தம்பியாக நடித்திருக்கும் பாலாஜி, விருதுபெறும் தகுதிக்குரிய நடிப்பை வழங்கியிருக்கிறார். 'பட்டாளம்', 'காதல் சொல்ல வந்தேன்' ஆகிய படங்களில் நடித்திருக்கும் இவர், வாயில் எச்சில் ஒழுகியபடியே கைகளை மடக்கி வைத்துக் கொண்டு.. கால்களைத் தரையில் தேய்த்தபடியே தனது கதாபாத்திரத்தை முழுமையாக உயிரூட்டியிருக்கிறார். ஒரு காட்சியில் கூட மாறுதலைக் காட்டாமல் கடைசி வரையிலும் நடிப்பில் இவர் காட்டியிருக்கும் கவனத்தையும், அர்ப்பணிப்பையும், படம் பார்த்தால் மட்டுமே உணரமுடியும்.
’எம்பேர நானே மறந்தேனடா உன்ன நெனச்சு’ பாடல் உட்பட அபிஷேக்கின் இசையில் அமைந்த மூன்று பாடல்களுமே கதையைத் தூக்கிப்பிடிக்கும் பாடல்கள். படத்தில் இருக்கும் சின்னச்சின்ன குறைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் மெய்யழகி முழுமையான படம்.
இந்து டாக்கீஸ் தீர்ப்பு
கையாண்ட கதையை அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் சொல்ல முயன்று வெற்றிபெற்றது, தொய்வில்லாத திரைக்கதை, கதாபாத்திரங்களாக நடித்தவர்களின் இயல்பான நடிப்பு. ஆகிய காரணங்கள் மெய்யழகியை அனைவரும் பார்க்கத் தகுதியான படமாக்கியிருக்கிறது.