

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில், புதுமுக இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் படம் 'ராஜா ராணி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தினை வெளியிட இருக்கிறது.
விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் இருவர், எப்படி இணைகிறார்கள் என்ற ஒரு வரிக்கதையினை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.
3 வருடங்களுக்கு பிறகு நயன்தாரா மீண்டும் இப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்திருப்பதால், இப்படத்திற்கு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு. அதுமட்டுமன்றி இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பினை கமல் துவக்கி வைத்தார்.
ஆர்யா - நயன்தாரா திருமணம் என்று விளம்பரம் வெளியிட்டு படத்திற்கு எதிர்பார்ப்பினை எகிற வைத்து விட்டார்கள். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் அட்லீ என்பது படத்திற்கு கூடுதல் பலம்.
இப்படம் குறித்து இயக்குநர் அட்லீ “ ஒரு நாள் ராத்திரி சாப்பிட்டுகிட்டிருந்தேன்.. அப்ப எங்கம்மா 'டேய்.. அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சுலடா.. அது இப்போது வாழமாட்டேன் அப்படினு வீட்டிற்கு வந்துடுச்சு' சொன்னாங்க. ஒரு கட்டத்துல நான் கேட்குற பல விஷயங்கள் டைவர்ஸ் ஆகவே இருந்தது. இதை வெச்சு ஒரு கதை பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். அது தான் 'ராஜா ராணி'.
ரெண்டு மனசும் புரிஞ்சிக்கிட்ட நாள்லேந்து வாழ்க்கை தொடங்கிரும். ஆனா அதை யாருமே செய்யறதில்லை. ஒரு கணவன் - மனைவிக்கு இடையயேயான காதல் கதை தான் இது. ஆனால் அதுல சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள், சஸ்பென்ஸ்னு இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், டிரெய்லர், போஸ்டர்கள் என அனைத்துமே படு கலர்ஃபுல்லாக அமைந்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் 'ராஜா ராணி' ஹாட் டாக்.
படமும் அந்த வகையில் அமையுமா என்பது செப்டம்பர் 27ம் தேதி தெரியவிருக்கிறது.