பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ரசிகர் மன்றங்கள் குரல் கொடுக்க வேண்டும்: நடிகர் சங்கம் வேண்டுகோள்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ரசிகர் மன்றங்கள் குரல் கொடுக்க வேண்டும்: நடிகர் சங்கம் வேண்டுகோள்
Updated on
1 min read

பெண்கள், சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க திரைத்துறையினர் தங்கள் ரசிகர் மன்றங்களை ஈடுபடுத்த வேண்டும் என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அரசுக்கும் காவல்துறைக்கும் பல தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில் அனைத்து திரைத்துறை கலைஞர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம்.

பல லட்சம் ரசிகர்களைக் கொண்டு, அவர்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி நலத்திட்ட உதவிளை செய்து வருகிறீர்கள். அத்துடன் பெண்களுக்கு, சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றுக்கும் முன்னுரிமை கொடுத்து சமூக செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை ஒரு நடிகை என்று மட்டும் பார்க்காமல் பெண் இனத்துக்கான கொடுமையாகவே கருதுகிறோம். நடிகை வரலட்சுமியும் இதுபோன்று தனக்கேற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை மனகசப்புடன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இவர்களுக்காக சட்டப்படியும் தார்மீக ரீதியாகவும் இணைந்து குரல் கொடுக்க முடிவெடுத்துள்ளோம்.

திரை, நாடகக் துறையில் உள்ள பெண்கள், தொழில் பாதுகாப்பையும் உளவியல் ரீதியான பாதுகாப்பையும் பெறுவதற்கு தனிக்குழுக்கள், வழக்கறிஞர்களை நியமிப்பது குறித்து சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in