

சினிமாவில் இதைவிட நிறைய பிரச்சினைகளை பார்த்தவன். இந்த சிறுப்பிரச்சினைக்கா ஒடி ஒளிவேன் என்று இயக்குநர் சமுத்திரக்கனி கூறினார்.
ஜெயம் ரவி, அமலா பால், ராகினி மற்றும் பலர் நடிக்க சமுத்திரக்கனி இயக்கி இருக்கும் படம் 'நிமிர்ந்து நில்'. வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த 'நிமிர்ந்து நில்' திரைப்படம், பிப்ரவரி 7ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் திட்டமிட்டப்படி படம் வெளியாகவில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கலால் படம் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில் தீடிரென சமுத்திரக்கனி தற்கொலை முயற்சி என்று தகவல் காட்டுத்தீப் போல பரவியது. உடனே சமுத்திரக்கனியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
"நான் நல்லா தான் இருக்கேன். என்னோட அடுத்த பட பணிகளுக்காக சென்னையை விட்டு வெளியே வந்தேன். அதற்குள் இப்படி ஒரு செய்தியை பரவி இருக்கிறது. படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்தது உண்மைதான். ஆனால், அதற்கு பயந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிற அளவிற்கு நான் கோழை அல்ல.
சினிமாவில் நிறைய பிரச்சினைகளை பார்த்தவன் நான். எந்த ஒரு பிரச்சினையை வந்தாலும் ஒடி ஒளிந்து கொள்ளும் ஆள் நானில்லை. அப்பிரச்சினையை எதிர்கொள்ளும் தைரியம் உடையவன் நான்.
'நிமிர்ந்து நில்' திரைப்படம் அனைத்து தடங்கல்களையும் தாண்டி வெற்றிகரமாக வெளிவரும்." என்று கூறினார்.