

சத்யராஜ் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் 'நாய்கள் ஜாக்கிரதை' படப்பிடிப்பு இன்று முதல் கோயம்புத்தூரில் துவங்கியது.
பிரபுசாலமன் இயக்கத்தில் சிபிராஜ் நடித்த 'லீ' படத்தினை நாதாம்பாள் ஃபிலிம் நிறுவனம் மூலம் தயாரித்தார் சத்யராஜ். அதனைத் தொடர்ந்து படம் எதுவுமே தயாரிக்கவில்லை.
அதே நிறுவனத்தின் சார்பில், தற்போது சிபிராஜ் நடிக்கும் 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தினை தயாரிக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் சிபிராஜ், அருந்ததி, மனோபாலா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நாயகனுக்கு இணையான முக்கிய வேடத்தில் நாய் ஒன்று நடிக்கவிருக்கிறது. இதுவரை இந்திய திரையுலகில் நாயகனுக்கு இணையான வேடத்தில் நாய் நடித்ததில்லை. இதற்காக ராணுவத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவ நாய் ஒன்றை நடிக்க வைக்கவிருக்கிறார்கள்.
படத்தின் பல காட்சிகளில் நாயின் நடிப்பு மிரட்டலாகவும், வியக்க வைக்கும் அளவுக்கும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் ஆக்ஷனுக்கு நிகராக நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 9 ஆம் தேதி கோவையில் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. கோவையைத் தொடர்ந்து ஊட்டி, சென்னை, பாலக்காடு, பெங்களூரு, லடாக் ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
'நாணயம்' படத்தினை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தினை இயக்கி வருகிறார்.