

இனி எந்த முகத்தோடு தமிழ் மக்களை பார்க்க வருவீர்கள் என்று இயக்குநர் சேரன் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வரும் இயக்குநர் சேரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் காட்டமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில் சேரன், "பிரதமர் மோடி வாய் திறக்கவேணடும். இவ்வளவு மக்களும் வெய்யிலிலும் பனியிலும் பிழைப்பையும் பசியையும் பார்க்காமல் தமிழகம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கும்போது பிரதமர் அந்த மக்களிடம் பேசவேண்டும்.
நீங்கள் இரவோடு இரவாக கறுப்புப் பண ஒழிப்பு திட்டம் கொண்டுவந்தபோது உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து எங்கள் வாழ்க்கையின் அடுத்த நகர்வு பற்றி பேசாமல் மறுநாள் வாய்பேசாமல் வங்கி வாசலில் நின்ற மக்களிடம் பேச என்ன தயக்கம்?
இந்நேரம் சென்னை வந்திருக்க வேண்டாமா. இனி எந்த முகத்தோடு இந்த மக்களை பார்க்க வருவீர்கள்" என்று காட்டமாக கேட்டுள்ளார் சேரன்.