ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விளம்பரப்படுத்த காசில்லை : மிஷ்கின்
விமர்சகர்கள் மத்தியில் சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்ற படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. இப்படத்தினை தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார் மிஷ்கின். திரையரங்குகளுக்கு கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் ஓட்டும் பணியையும் இவரே செய்து வருகிறார்.
சமீபத்தில் மதுரை மற்றும் திருச்சி ஆகிய ஊர்களுக்கு சென்றார். மதுரையில் இப்படம் திரையிடப்பட்டுள்ள மினிப்பிரியா திரையரங்கத்திற்கு சென்றார். அங்கு அவர் பேசியது “நான் இதுவரை 73 தொழில்கள் செய்துள்ளேன். சினிமா என்பது எனக்கு 74 ஆவது தொழில். கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே என்னுடைய அலுவலகத்தை அடகு வைத்து இந்த திரைப்படம் எடுத்தேன்.
மதுரையிலேயே சிறந்த கலா ரசிகர்கள் இருக்கிறார்கள். மற்ற இடங்களைவிட மதுரையில் சினிமாவுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. எனவே இங்கு சினிமா சிறப்பாக ஓடுகிறது.2 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் இந்த படத்தை எடுத்துள்ளேன். இதற்கு முந்தைய திரைப்படமான 'முகமூடி' மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு பெறவில்லை. எனவே, விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு பிராயச்சித்தமாக இந்த திரைப்படத்தை எடுத்துள்ளேன்.
இந்த திரைப்படம் சிறப்பாக இருந்தால் தியேட்டருக்கு உறவினர்களை வரவழையுங்கள். நன்றாக இல்லையென்றால் யாரும் இந்த சினிமாவை பார்க்காதீர்கள்.
ஏற்கெனவே இரவில் மாறுவேடத்தில் சினிமா போஸ்டர் ஒட்டியுள்ளேன். இந்த நிலையில், அதிக போஸ்டர்களை மதுரையில் ஒட்ட இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அதன்பின்பு திருச்சி வந்த மிஷ்கின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர்களிடையே அவர் “இப்படம் பலரின் பாராட்டை பெற்றிருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷத்தை தருகிறது. இந்த படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லை. என் கதையைக் கேட்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். 'முகமூடி' என்ற தோல்விப்படம் கொடுத்த பண நெருக்கடி, மன நெருக்கடிகளுக்கிடையில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் கூட வரவில்லை. அதனால்தான் நானே இந்த படத்தை தயாரித்தேன்.
என் அலுவலகத்தை அடமானம் வைத்துதான் இந்த படத்தின் கதையையே எழுதினேன்.
ஹாலிவுட் தரத்தில் படம் இயக்கவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த படத்தை நான் ஒரு பாட்டு கூட இல்லாமல் இயக்க முக்கிய தூண்டுகோலாய் இருந்தது. நான் இந்த படத்தை எனக்கான சுய பரிசோதனை முயற்சியாகத்தான் எடுத்து கொண்டேன். இந்த படத்தில் ஒரு காதல் சீன் வைக்க கூட இடம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் எனக்கு 42 வயதாகிறது; நான் மரத்தை சுற்றிவந்து டூயட் எல்லாம் பாட முடியாது. அதனால் படத்தில் டூயட் இல்லை.
முதல் படத்தில் தெரியாத்தனமாக வைத்த குத்து பாட்டு தெரியாத்தனமாக ஓடிப்போச்சு. அடுத்த படத்திலும் தயாரிப்பாளரின் வற்புறுத்தலின் பேரில் வாய்த்த குத்து பாட்டு பயங்கர ஹிட் அடித்து, என்னை எல்லோரும் குத்துபாட்டு இயக்குனர் என அழைக்க ஆரம்பித்தார்கள். அது எனக்கு நாகரிகமாகப்படவில்லை.
இந்த படத்திலும் குத்து பாட்டில்லை என்றால் பெட்டி வாங்க மாட்டோம் என சொல்லிவிட்டார்கள். இந்த படத்தை விநியோகஸ்தர்களுக்கு நான் 'நந்தலாலா' தந்த அனுபவத்தால் போட்டு காட்டவில்லை. ஆனால் அதையும் மீறி ரிலீஸ் ஆனது பத்திரிகையாளர்களின் நேர்மையான பாராட்டுகளால்தான். இந்த கதையில் யாருமே ஓநாய் பத்திரத்தில் நடிக்கமாட்டார்கள் என தெரியும். அதனால்தான் என் கதையை நம்பி நானே களத்தில் இறங்கினேன்.
இதுவரை 6 படம் செய்திருக்கிறேன். ஒரு கோடி ரூபாய்க்கு கூட இந்த படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. என்னுடைய 6 படங்களையும் பாருங்கள் ஒரு படத்திலாவது ஏதேனும் ஒரு பெண்ணை மோசமாக காட்டியிருக்கிறேனா? வயது குறைந்த இளைஞர்கள், வயதானவர்களை கிண்டல் பண்ணும் காட்சி இருந்திருக்கிறதா ? அவ்வளவு கண்ணியமாக படம் எடுத்ததுக்கு எனக்கு கிடைத்த பரிசுதான் இது.
நல்ல படங்களை எடுக்கவேண்டும் என நினைத்தது தப்பா? இந்த படத்திற்காக 107 கிலோவில் இருந்து 87 கிலோவாக எடை குறைந்திருக்கிறேன். கடைசியில் இந்த படத்தை யாருமே வாங்கவில்லை. 30 லட்ச ரூபாய்க்காக நாய் மாதிரி அலைந்தும் கடன் கிடைக்கவில்லை. முதல் நாள் 30 லட்ச ருபாய் கொடுக்காததால் 10 தியேட்டர்களில் எனது படத்தை எடுத்துவிட்டார்கள். நம்பிக்கை இழந்து மீண்டும் தெருவுக்கே வந்துவிடலாம் என எண்ணினேன். ஆனால் அடுத்தநாள் உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தது.
அந்த ஒரே காரணத்தால்தான் இதோ ஒரு வாரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஒட்டக் கூட காசு இல்லை. கடன் வாங்கித்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கண்ணீர் மல்க பேசினார்.
