எனக்கு பின்னால் யாருமில்லை: சிவகார்த்திகேயன் உருக்கம்

எனக்கு பின்னால் யாருமில்லை: சிவகார்த்திகேயன் உருக்கம்
Updated on
3 min read

'எனக்கு பின்னால் யாரும் கிடையாது. எனக்கு முன்னால் இருப்பவர்கள் தான் ஆதரவாக இருக்க வேண்டும்' என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ராஜா பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் ஆகியவற்றை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். மேலும், 24 ஏ.எம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்பதால் ஏ.வி.எம்.சரவணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியது:

”முதன் முதலில் அட்லீ "என் உதவி இயக்குநர் ஒரு கதை ஒன்று வைச்சிருக்கான். அதில் இப்படி ஒரு காட்சி இருக்கிறது" என்று ஒரே ஒரு காட்சி மற்றும் சொன்னார். ஐடியாவாக நல்லாயிருக்கே என்று பயங்கரமாக சிரித்து ரசித்தேன். உனக்குத் தான் எழுதிட்டு இருக்கேன் என்று அட்லீ சொன்னவுடன், பையனாக பார்ப்பதே எப்படி என்று நினைக்கிறார்கள் இதில் பெண் வேடம் எப்படி என்று சொல்லிவிட்டென். இல்ல. நீ சும்மா கேளு'' என்றார் அட்லீ.

உடனே இயக்குநர் பாக்யராஜ் கண்ணனை அழைத்து கதையைக் கேட்டேன். சிரிப்பதற்கும், ரசிப்பதற்கும் அக்கதையில் நிறைய இடங்கள் இருந்தது. எல்லாரும் ரசிக்கும்படியான ஒரு க்யூட்டான கதை தான் 'ரெமோ'. சூப்பராக இருக்கு, நம்ம எங்க பெண் வேடம் எல்லாம் போடுவது. நம்ம போட்டால் நல்லாயிருக்காது என்று சொல்லிவிட்டேன்.

சில நாட்கள் கழித்து இன்னொரு முறை கதைக் கேட்கலாமா என்றவுடன் மீண்டும் சொன்னார். நல்லாயிருக்கு, எனக்கு சரியாக வருமா என யோசித்துச் சொல்கிறேன் என்று அனுப்பிவிட்டேன். இதே போல 10 மாதங்களில் சுமார் 8 முறை இக்கதையைக் கேட்டிருக்கிறேன்.

நீங்க மட்டும் தான் இக்கதையை பண்ண முடியும் என்று இயக்குநர் கூறும் போது பில்டப் கொடுக்கிறார்கள் நம்ம உஷாரா இருக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன். "சரி.. ட்ரை பண்ணலாம்" என்று சொன்னேன். இக்கதைக்கு எருமையை விட பொறுமை அவசியமாக தேவைப்பட்டது. ஏனென்றால் மேக்கப் போடும் போது எல்லாம் தலையில் 50 ஹேர்பின்கள் இருக்கும். 10 மாதம் எனக்காக காத்திருந்த இயக்குநருக்கு என்னுடைய 1 வருடத்தை ஒதுக்கி கொடுத்தேன். நான் ஒரு பெரிய நடிகர், நீங்கள் பெரிய இயக்குநர், பெரிய கதை என்பதை எல்லாம் கடந்து, இப்படத்துக்கு மக்கள் வந்து ரசித்துவிட்டு போக வேண்டும் என்று நினைத்தேன்.

இப்படத்துக்கு நான் தான் தயாரிப்பாளர் என்று நிறையப் பேர் எழுதியிருந்தார்கள். ஒரு வேளை நான் இப்படி ஒரு படம் தயாரித்திருந்தால் இவ்வளவு பெரிய விழா எல்லாம் எடுத்திருக்க மாட்டேன். ரேடியோவில் ஒரு பாடலை வெளியிட்டுவிட்டு சென்றிருப்பேன். இவ்வளவு பெரிய மெனக்கிடலுக்கு காரணம் எல்லாமே ராஜா அண்ணன் தான்.

நானே தயாரிக்கலாம் என்று யோசித்தேன். காமெடியனாக அனைத்து நாயகர்களுடன் நடித்தால் போது என்று நினைத்தவனுக்கு நாயகன் என்ற பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு மேல் ஒரு பெரிய அங்கீகாரத்தால் எனக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

இப்படத்துக்கு முதலில் உள்ளே வந்தவர் பி.சி.ஸ்ரீராம் சார். அவர் நான் வளரும் கலைஞர் என்று சொன்னாலும், நாங்கள் அவரை ஒளிப்பதிவின் பிதாமகராகத் தான் பார்க்கிறோம். அவர் உள்ளே வந்தவுடன் சின்ன ரொமோவாக இருந்த படம் ஷங்கர் சார் ரொமோவாக மாறியிருக்கிறது. என்னுடைய பெண் வேடத்துக்கு பி.சி.ஸ்ரீராம் சார் ஸ்பெஷலாக லைட்டிங் எல்லாம் பண்ணியிருந்தார். நானே ஒருமுறை ஸ்கிரீனில் பார்க்கும் போது காதல் வந்துவிட்டது. "சே.. நாம தான் அது" என்று அடித்துக் கொண்டேன்.

நான் பெண் வேஷம் போட முடியுமா என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 8 மேக்கப் டெஸ்ட்டுக்குப் பிறகு நிக்கி, ரேச்சல், அனு மேடம் இவர்கள் மூவரும் போட்ட மேக்கப் சரியாக இருந்தது. என்னுடைய மேக்கப் பிடித்திருந்தது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் 3 பேரும் தான். பெண் வேடத்துக்கு 42 நாள் படப்பிடிப்பு பண்ணினோம். அப்போது 3 முறை THREADING, WAXING உள்ளிட்ட நிறைய பண்ணினேன். அதெல்லாம் எப்படி பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு வலித்தது.

முதல் நாள் பெண் வேடத்துக்கான மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு வெளியே வர பயமாக இருந்தது. ஒளிந்துக் கொண்டு வெளியே பார்த்தேன். பி.சி.ஸ்ரீராம் சார் முதல் ஷாட் பண்ணி என்னை ப்ரேமில் பார்த்தவுடன் தான் நம்பிக்கை வந்தது. முதல் நாள் எப்படி நடிப்பது என்று தெரியவில்லை. 42 நாட்கள் நடித்து முடித்தவுடன் பெண் வேடத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. 20 நாள் ப்ரேக் எடுத்து வீட்டில் சும்மா உட்கார்ந்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்தேன்.

நான் அதிகமாக கோபப்பட மாட்டேன், எரிச்சலடைய மாட்டேன். ஆனால் இப்படப்பிடிப்பில் எனக்கு அதெல்லாம் வந்துவிட்டது. அதெல்லாம் தாண்டி ரொம்ப சந்தோஷமாக பணியாற்றினேன். நான் ஒரு நடிகராக ஆகவிட்டேனா என்றெல்லாம் தெரியாது. நடிகராக ஆவதற்கு முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன்.

இப்படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி. '3' படத்தின் போது எப்படி இருந்தாரோ, அப்படியே இன்னும் இருக்கிறார். அவருடைய பணத்துக்கும் புகழுக்கும் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அவருடைய ரேஞ்சிற்கு நான் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் எங்களுடைய நட்பு என்பது இன்னும் அப்படியே இருக்கிறது. நான் எப்போது கேட்டாலும், கதையே கேட்காமல் ஒப்புக் கொள்வார். அந்த நம்பிக்கையில் தான் அவரிடம் நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பி.சி.ஸ்ரீராம் சார், இயக்குநர் என எல்லாருமே கீர்த்தி சுரேஷ் நாயகி என்று சொல்லும் போது வேண்டாம் என்று சொன்ன முதல் ஆள் நான் தான். 2 படங்கள் தொடர்ச்சியாக பண்ணினால் கிசுகிசு வந்துவிடும் என நினைத்தேன். நானே அவரிடம் நல்ல நாயகி இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருக்கிறேன். இப்படத்தின் நாயகியாக நடிக்க முடியாது என்று சொன்ன அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அழகாக இருந்தது.

ஒரு விருது வழங்கும் விழாவில் ஷங்கர் சார் "சினிமாவுக்கு சின்சியராக இல்லாதவர்களை சினிமா தூக்கி போட்டுவிடும்" என்று சொன்னார். அது எனக்கு ப்ளார் என அறைந்த மாதிரி இருந்தது. அதே மந்திரத்தை தயாரிப்பாளர் ராஜா பின்பற்றி வருகிறார். ஒரே படத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று இல்லாமல் என்னை அடுத்த அடுத்த இடத்திற்கு கொண்டு போக என்று நினைக்கிறேன். அதில் நிறைய கஷ்டங்கள் வருகிறது. அதை தாண்டி தான் வருகிறேன். என் படத்தைப் பார்க்க வரும் மக்கள், தட்டிக் கொடுக்கும் நல்ல உள்ளங்கள் தரும் நம்பிக்கையில் தான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன். எனக்கு பின்னால் யாரும் கிடையாது. எனக்கு முன்னால் இருப்பவர்கள் தான் ஆதரவாக இருக்க வேண்டும்.

இந்த மேடையில் நான் என் மனைவி ஆர்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்துக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறேன் என்று அவருக்கு தெரியும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in