விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் படைப்பாளியால் மெருகேற முடியாது: சீனு ராமசாமி நேர்காணல்

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் படைப்பாளியால் மெருகேற முடியாது: சீனு ராமசாமி நேர்காணல்
Updated on
2 min read

“ஒரு இயக்குநராக சினிமாவுக்குள் பயணிக்கத் தொடங்கி ஒன்பது வருடங்கள் ஆயிடுச்சு. ரசிகனை எளிமையாக சென்றடையும் வாழ்வியல் சார்ந்த நடுநிலையான சினிமாக்களைத்தான் இதுவரை எடுத்திருக்கிறேன். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘தர்மதுரை’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பும், வாழ்த்துகளும், பாராட்டுகளும் மகிழ்ச்சி அளிக்கின்றன” என்றவாறு பேசத் தொடங்கினார் சீனு ராமசாமி.

‘கூடல் நகர்’, 'தென்மேற்குப் பருவக்காற்று', ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ என்று மனிதர்களின் உள்ளுணர்வைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை முன்வைக்கும் தேர்ந்த படைப்பாளியான அவருடன் ஒரு நேர்காணல்…

‘தர்மதுரை’ படத்துக்கான வரவேற்பும், விமர்சனங்களும் உங்களை எந்த வகையில் மாற்றியிருக்கிறது?

இங்கே வெற்றி, தோல்வியை நான் வேறுவிதமாகத்தான் பார்க்கிறேன். சமகாலத்தில் கொண்டாடப்படும் படைப்புகள், எதிர்காலத்தில் நிராகரிக்கப்படுகின்றன. அதுவே, சமகாலத்தில் கவனிக்கப்படாத படைப்புகள் எதிர்காலத்தால் கொண் டாடப்படுகின்றன. ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ படம் முதல் இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். கலைக்கு வெற்றி, தோல்வி கிடையாது.

நான் தொடர்ந்து எனக்கான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன். ‘கூடல் நகர்’, ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படங்கள் வெளியானபோது இருந்த வியாபார சூழல் இன்று இல்லை. முதல் மூன்று நாட்கள் வரும் கூட்டத்தை வைத்து ஒரு படத்தின் வெற்றி, தோல்வி அறிவிக்கப்படும் சூழ்நிலையில் இருந்து வருகிறோம். விஜய்சேதுபதி என்ற இளைஞன் என் மீதும், என் படைப்பின் மீதும் கொண்ட அன்பால் உடனடியாக இந்தப் படத்தை எடுத்து முடிக்க முடிந்தது.

அதை மக்களிடம் சரியாக கொண்டு செல்லவும் முடிந்தது. ஒரு படைப்பாளிக்கு வெற்றி என்பது அவனது சமரசமற்ற வாழ்நாள் பாதை. அந்த வகையில் இந்தப்படத் துக்கு கிடைத்து வரும் வரவேற்பு என்னை நெகிழ்ச்சிப்படுத்தவே செய்கிறது.

திரைக்கதை மெதுவாக நகர்கிறது; திரைக் களம் நேர்க்கோட்டில் செல்லவில்லை என்று படத்தைப் பற்றிய சில விமர்சனங்களும் வந்ததே?

ஒரு படைப்பு பொதுவெளிக்கு வரும் போது அதை நோக்கி வரும் விமர்சனங் களை சந்திக்கத்தான் வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஒரு படைப்பாளியால் மெருகேற முடியாது.

அதே நேரத்தில் விமர்சனம் என்ற போர்வையில் நிகழ்த்தப்படும் அவதூறு களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.படம் மெதுவாக நகர்கிறது என்ற விமர்சனத்தை நானும் அறிந்தேன். வாழ்க்கையில் நிதானமாக நகர்ந்து செல்லும் நாம் வேகமான படங்களுக்குப் பழகியிருக் கிறோம். அதற்கு காரணம், சத்தத்தின் மூலமாக விறுவிறுப்பு நிறைந்த படங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ‘தர்மதுரை’ வாழ்வியலைச் சொல்கிற ஒரு படம். திரையரங்குக்குள் வரும் மக்கள் அமைதியான மனநிலையோடுதான் படத் தைப் பார்க்க வேண்டும்.

அதேபோல, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த மாட்டார்களா? என்ற விமர்சனமும் வந் தது. படத்தில் வாகனம் உள்ளிட்ட பல விஷயங்களில் எந்த காலகட்டத்தில் கதை நகர்கிறது என்பதை இலைமறை காயாக சொல்லவே செய்திருக்கிறேன். இயல்பாகவே மருத்துவர்கள் செல்போன் பயன்படுத்துவதை விரும்புவதில்லை. இது, அந்த துறையைச் சார்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அதேபோல, கதைமாந்தர்கள் எல்லோரும் வாழ்க்கையில் தோற்றுப்போனவர் கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சி யாக இல்லை. பின், எப்படி ஒவ்வொருத்த ரோடும் தொடர்பில் இருக்க முடியும்? இப்படி பல விஷயங்களை நுட்பமான உளவிய லுடன் பதிவு செய்துள்ளேன். இவற்றை எல்லாம் மீறி விமர்சனமாக சில அவதூறு கற்கள் விழவும் செய்தன. அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் இந்தப்படத்தை தாங்களாகவே பேசிப்பேசி வெற்றிபெற வைத்ததில் மகிழ்ச்சி.

படத்தில் விஜய்சேதுபதி, ‘‘எங்க சார்கிட்ட கத்துக்கிட்ட நீச்சல். அது சாகுற வரைக்கும் மறக்காது’’ என்று ஒரு இடத்தில் வசனம் பேசுவார். அது, உங்களைப் பார்த்து விஜய்சேதுபதி பேசுவதுமாதிரி எழுதியதாக தெரிகிறதே?

இந்த வாழ்வியல் சினிமாவை எனக்கு தானமாகத் தந்து சென்ற என் வாத்தியார் பாலுமகேந்திராவை நினைத்து இந்த சீனு ராமசாமி எழுதிய வசனம் அது.

‘இடம் பொருள் ஏவல்’ வெளியீடு எப்போது?

‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படமும் ‘தர்மதுரை’ மாதிரிதான். இந்தப்படம் எப்படி வெகுஜன மக்கள் வரவேற்கும்படி அமைந்ததோ, அதைவிட கூடுதலாக நகைச்சுவை சேர்த்துள்ளோம். அக்டோபரில் திரைக்கு வரும்.

அடுத்த படைப்புக்குத் தயாராகிவிட்டீர்களா?

என்னை விரும்புகிற நடிகர்களுக்காக வேலை செய்யத் தயாராகவே இருக்கிறேன். சமீபத்தில் மம்மூட்டியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறேன். விரைவில் அடுத்த படம் குறித்து முறையாக அறிவிப்பேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in