

ஜல்லிக்கட்டுப் போராட்ட நிலவரம் குறித்து, தமிழக முதல்வருடன் பேசியதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.
அவற்றில் கமல்ஹாசன் கூறியது:
'' தமிழக முதல்வரிடம் இதுகுறித்துப் பேசினேன். அவரிடம் கவலைமிகுந்த கேள்வி கேட்கப்பட்டது. விரைவில் அதற்குப் பதில் சொல்வார். உங்களைத் திருப்திப்படுத்த அவர்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள். அமைதியாக இருங்கள்.
அமைதியோ, செயல்பாடோ உங்களின் விருப்பம். நான் அமைதிக்கானவன். தமிழர்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளவர்களே. உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். அரசியல்வாதிகளும், மக்களும் கொஞ்சம் யோசியுங்கள்.
நெருக்கமானவர்கள் மூலம் இந்தியப் பிரதமருக்கு தகவல் சொல்லப்பட்டது. நீதி கோருவோர் அமைதியைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம்.
வீரத்தின் உச்சகட்டமே அஹிம்சை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம்'' என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.