

'காலா' போஸ்டரில் ரஜினி அமர்ந்துள்ள ஜீப், தங்களுடைய நிறுவனத்தின் அருங்காட்சியகத்துக்கு வேண்டும் என்று மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்களை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
ரஜினியோடு ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பகிர்ந்துள்ள மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவர் ஆனந்த் மகேந்திரா "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனும் பெரும் ஆளுமை ஒரு காரை சிம்மாசனம் போல் பயன்படுத்தும்போது அந்த காரும் வரலாற்றுச் சின்னமாகிவிடுகிறது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட அந்தக் கார் பற்றித் தெரிந்தால் தயவு செய்து எங்களுக்குத் தெரிவியுங்கள். அந்தக் காரை எங்களது நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இவருடைய கருத்துக்கு "அந்த போஸ்டரே ஏதோ போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதுபோல் பரிதாபமாக இருக்கிறது" என ஒருவர் ட்விட்டரில் சொல்ல, "எந்தக் காரின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்தார்களோ அந்தக் கார்கூட பொக்கிஷமாக சேர்க்கப்பட வேண்டியதே" என்று பதிலளித்துள்ளார் ஆனந்த் மகேந்திரா.
மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவரின் இக்கருத்தால், அவருடைய ட்விட்டர் தளம், ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.