

போலீஸ் கதை இயக்குவது என்பது எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்பது இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்தார்.
அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய், மகிமா, வம்சி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'குற்றம் 23'. மருத்துவப் பின்னணியில் உருவாகி இருக்கும் த்ரில்லர் பாணியிலான படமாகும். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கெளதம் மேனன் இப்படத்தின் இசையை வெளியிட ஜெயம் ரவி பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் இயக்குநர் கெளதம் மேனன் பேசியது:
"அருண் விஜய்யை வைத்து எந்த மாதிரியான கதைக்களத்திலும் படம் பண்ணலாம். இதனை அவரோடு பேசும் போதே தெரிந்து கொண்டேன். 'என்னை அறிந்தால்' படப்பிடிப்பின் போது, சண்டைக்காட்சிகளில் எந்தவொரு ஒத்திகையும் இல்லாமல் நடித்தார். நான் பணியாற்றிய நடிகர்களில் எந்தவொரு ஒத்திகையும் இல்லாமல் பண்ணிய ஒரே நடிகர் அருண் விஜய் மட்டும் தான்.
சம்பளம் தவிர, பணமே இல்லாமல் படம் இயக்க வேண்டும் என்று நினைத்தால் அருண்விஜய்யை வைத்து பண்ணலாம். ஒரு ரோட்டில் இறங்கி ஓடுங்கள் என்றால் ஒடுவார். அந்த மாதிரி பண்ணியதால்தான் அஜித் சாரும் "அருண் பண்ணட்டும்", அப்போது தான் எனது பாத்திரம் இன்னும் வலுப்பெறும் என்றார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் சண்டைக் காட்சிகளை எனக்கு காட்டியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். போலீஸ் கதை என்பது எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அருண் விஜய்யின் லுக்கை மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்.
அறிவழகன் இயக்கிய 'ஈரம்' தொழில்நுட்ப ரீதியில் மிகவும் அற்புதமான படம். இன்றைக்கு பேய் படம் என்று பேசுகிறார்கள், ஆனால் அதனை அறிவழகன் அப்போதே பண்ணிவிட்டார். இயக்குநர் ஷங்கரின் பள்ளியில் இருந்து வந்த தொழில்நுட்ப ரீதியில் மிகவும் வல்லவர் அறிவழகன். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு விளையாட்டை மையமாக வைத்து ஒரு படம் பண்ணினார்.
அப்போது அவருடைய படத்தை நான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், என்னை ஒரு படத்தில் நடிக்கச் சொல்லிக் கேட்டார். எப்போதுமே என்னுடைய படப்பிடிப்பில் வந்து அமர்ந்து கொள்வார். "இல்லை அறிவு.. எனக்கு தெரிந்ததை நான் பண்ணுகிறேன். வேறு ஏதாவது நாயகர்களுக்கு பிரச்சினையாகிவிடும்" என்று தெரிவித்தேன்.
ஒரு நாவலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.