

24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகனாக நடிக்க நிவின் பாலி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'Ulidavaru Kandanthe' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ தயாரிக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மற்றொரு தமிழ் படத்தின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நிவின் பாலி. இப்படத்தின் கதையை 'ரெமோ' தயாரிப்பாளர் ராஜா எழுத புதுமுக இயக்குநர் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்க இருக்கிறார். 24 ஏ.எம் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
'ரெமோ', 'மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் படம்' ஆகியவற்றைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இப்படத்தின் அறிவிப்பை 'ரெமோ' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அன்று சிவகார்த்திகேயன் அறிவித்தார்.