

விக்னேஷ் புரொடக்ஷன் தயாரிப்பில் இளையராஜா இசையமைத்திருக்கும் ‘ஒரு ஊர்ல’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா பேசும்போது, ‘‘இதுவரை இசை அமைத்த எந்த படத்துக்கும், நான் மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டதே இல்லை. இந்தப்படத்துக்கும் அப்படித்தான். இங்கே நீங்கள் பாடல்களை பார்த்த கணத்தில் மனதில் என்ன தோன்றியதோ, அப்படியே எனக்கும் தோன்றியது. முழு படத்தையும் பார்த்துவிட்டு இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறேன். புதிதாக யார் வந்தாலும் அவர்களுக்கு என் பெயர் உதவ வேண்டும். புதியவர்களுடன் பணி யாற்றுவதை ஆர்வத்துடன் விரும்புகிறவன், நான். புதியவர்களை ஊக்குவிக்க வேண்டும். நிறைய பேர் வாங்க, நான் இருக்கிறேன்’’ என்றார்.
பாலுமகேந்திரா பேசியபோது, ‘‘இளைய ராஜா என்னுடைய நண்பன் மட்டுமல்ல. நான் மிகமிக மரியாதை செய்யும் ஆத்மார்த்தமான இசைக் கலைஞன். என்னுடைய படங்களுக்கு வேறொரு பரிணாமத்தை ஏற்படுத்திக்கொடுத்தவர், ராஜா. வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவிருக்கும் என் ‘தலைமுறைகள்’ படத்துக்கு ராஜாதான் இசை. இந்தப் படத்தில் பாடல் காட்சிகள் இல்லையே என்று ஒரு வருத்தம் வரும். அதேநேரத்தில் இளையராஜா இசையில் வந்த என்னுடைய ’வீடு’ படத்தின் வெற்றியை நினைத்துக்கொள்வேன். அந்தப்படம் 12 லட்சங்களில் எடுத்த படம். கிட்டத்தட்ட 72 லட்சங்களுக்கு மேல் சம்பாதித்துக் கொடுத்தபடம். பாடல் இல்லையே என்று நினைத்துக்கொள்ளாமல் படத்தில் இளையராஜாவின் உணர்வு இருக்கிறது என்று என்னை நானே தேற்றிக்கொள்வேன். ராஜா என்பது பாட்டுமட்டுமல்ல. படத்தின் சம்பந்தப்பட்ட உணர்வுகளுக்கு அவர் கொடுக்கும் உயிர் இருக்கிறதே அது அசாத்தியமானது’’ என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர் பாலாஜி சக்திவேல், படத்தின் இயக்குநர் கே.எஸ் வசந்தகுமார் உள்ளிட்ட திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.