

சினிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஜெய் - அஞ்சலி இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'எங்கேயும் எப்போதும்'. இப்படத்துக்குப் பிறகு ஜெய் - அஞ்சலி இருவரும் இணைந்து படங்கள் நடிக்கவில்லை.
தற்போது 5 வருடங்கள் கழித்து மீண்டும் ஜெய் - அஞ்சலி இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கவிருக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சரவணன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு ரூபன் எடிட்டராக பணிபுரிய உள்ளார்.
இப்படம் குறித்து சினிஷ், "ஒரு திறமையான நடிகையாக அஞ்சலி மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அஞ்சலியின் நடிப்பாற்றலுக்கு எல்லை என்பதே கிடையாது. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை திரையில் அப்படியே பிரதிபலிக்கும் ஆற்றலை உடையவர் அஞ்சலி.
ஜெய் - அஞ்சலி கூட்டணி ஏற்படுத்திய இதே உற்சாகம் படம் முழுக்க நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்கிறார் இயக்குநர் சினிஷ்.