

'கத்தி' படத்துக்கான எங்களது எதிர்ப்பு தொடர்கிறது என்று மீண்டும் அறிவித்துள்ளது, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு.
'கத்தி' தீபாவளிக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கும் வேளையில், படத்தை எதிர்த்து வரும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் இன்று (திங்கள்கிழமை) மாலை சந்திப்பு நடைபெற்றது.
அந்தச் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களிடம் வேல்முருகன் பேசும்போது, "லைக்கா நிறுவனம் என்ற பெயர் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இது தொடர்பாக பெயர் எடுக்கிறோம் என்று ஐங்கரன் நிறுவனம் ஒப்புக் கொண்டாலும், லைக்கா நிறுவனம் ஒத்துக்கொள்ளவில்லை.
இதனால், எங்களது எதிர்ப்பு தொடரும். இது தொடர்பாக சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் இருவருமே "உங்களுடைய ஆதரவு இல்லாமல், படத்தை திரையிட மாட்டோம். எங்களுக்கு திரையரங்க பாதுகாப்பு தான் முக்கியம்" என்று கூறினார்.
அதுமட்டுமன்றி பெப்சி சிவாவும், "இனிமேல் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பணியாற்ற போவதில்லை" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். வேறு எந்தொரு நிறுவனத்தின் பெயரில் வேண்டுமானால் படம் வெளியிடட்டும்" என்று கூறினார்.
இதனால், தீபாவளிக்கு 'கத்தி' படம் வெளிவருவதில் சிக்கல் வலுத்துள்ளது.
இதனிடையே, சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதனிடம் தொடர்புகொண்டு பேசினேன். "தயாரிப்பு நிறுவனம் படத்தைக் கொடுத்தால் ரிலீஸ் செய்வோம். கொடுக்கவில்லை என்றால் படம் ரிலீஸாவாது" என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார் அவர்.