

நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்று செங்கல் எடுத்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக தியாகராயநகரில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் புதிதாக நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்படும் என்று புதிய நிர்வாகிகள் பதிவியேற்றவுடன் அறிவித்தார்கள்.
இக்கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் பூமி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் மற்றும் துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் இணைந்து முதல் செங்கலை வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருமே ஒரு செங்கல் எடுத்து வைத்து வருகிறார்கள்.
இவ்விழாவில் கலந்து கொண்டு செங்கல் எடுத்து வைத்துவிட்டு கமல் பேசியது, "கட்டிடமாக இருந்து, கல்லாகி மறுபடியும் கட்டிடமாக எழும்வரை இந்த சரித்திர சக்கரத்தின் சுழற்சியைப் பார்த்து கொண்டிருக்கிறேன். அனைவரும் ஒன்றுகூடி செய்ததில் மிகவும் சந்தோஷம். இந்த கல்லில் நானும் ஒரு சிமெண்ட்டாக இருந்ததில் மகிழ்ச்சி. புதிய கட்டிடம் கலைஞர்களுக்கு ஒரு பெரிய கோட்டையாக அமையும்" என்று தெரிவித்தார்.
அதேபோல், ரஜினிகாந்த் பேசும்போது, "இந்த அடிக்கல் நாட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இனிமேல் அனைத்துமே வெற்றிகரமாக நடக்கும்" என்றார்.