

'நானும் ரவுடி தான்' படத்தில் என்னுடைய நடிப்பு பிடிக்கவில்லை. இன்னும் சிறப்பாக நடித்து அவரை கவர வேண்டும் என விரும்புகிறேன் என நயன்தாரா தெரிவித்திருக்கிறார்.
ஹைதராபாத்தில் 2015ம் ஆண்டு படங்களுக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தென்னிந்திய திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.
2015ம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியான 'காக்கா முட்டை' மற்றும் 'நானும் ரவுடி தான்' ஆகிய படங்கள் ஃபிலிம் ஃபேர் விருதுகள் பட்டியலில் இடம்பெற்றன. இதில் 2015ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படம் என்ற விருதை 'காக்கா முட்டை' வென்றது.
அவ்விருதை பெற்றுக் கொண்ட தனுஷ், "'காக்கா முட்டை' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு சர்வதேச அங்கீகாரம் அளவுக்கு இருந்ததால், அதற்கு இன்னும் அதிகமாக பாராட்டு கிடைத்திருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
அவ்விழாவில் 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்ததற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது அளிக்கப்பட்டது. அவ்விருதை பெற்றுக் கொண்டு "நான் தனுஷிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். அவருக்கு 'நானும் ரவுடி தான்' படத்தில் என்னுடைய நடிப்பு பிடிக்கவில்லை. இன்னும் சிறப்பாக நடித்து அவரை கவர வேண்டும் என விரும்புகிறேன். இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் நயன்தாரா.
நயன்தாராவின் இந்த பேச்சால் விருது விழாவுக்கு வந்திருந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள். மேலும், 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பு சமயத்தில் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்தது. படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் தனுஷ் மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்குமே கருத்து வேறுபாடு நிலவியது நினைவுகூரத்தக்கது.