

காவல் நிலைய உதவி ஆய்வாளரின் காணாமல் போன துப்பாக்கியும், அதில் உள்ள தோட்டாக்களால் ஏற்படும் கலவர நிலவரமுமே '8 தோட்டாக்கள்'.
காவல்நிலையத்தில் எஸ்.ஐ.ஆக பணிபுரிகிறார் வெற்றி. தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடக்கமும் அமைதியுமாக இருக்கும் வெற்றியை காவல்நிலையமே கடுப்பில் பார்க்கிறது. லஞ்சம் வாங்காமல், உண்மையாய் இருந்தபடி உதவும் வெற்றியை காய விட வேண்டும் என்பதற்காகவே ஒரு பெரும் பொறுப்பை இன்ஸ்பெக்டர் மைம் கோபி ஒப்படைக்கிறார். அப்பெரும் பொறுப்பை கவனத்துடன் கையாளப் பயணிக்கும் வெற்றி, தன் துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறார். அந்த துப்பாக்கி யார் யாரிடம் எப்படியெல்லாம் கைமாறுகிறது, வெற்றி துப்பாக்கியை தோட்டாக்களுடன் கண்டுபிடித்தாரா, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது மீதிக் கதை.
'நான் போலீஸ் ஆகமாட்டேன்' என சிறுவனாக இருக்கும் போதே அலறும் வெற்றி பின்னாளில் எஸ்.ஐ.ஆகிறார். அறிமுகப் படம் என்பதாலோ என்னவோ தயங்கித் தயங்கிப் பேசுவது, நிதானம் கடைபிடிப்பது, நிலைகுத்திய பார்வையுடன் காதலியுடன் தேடலில் ஈடுபடுவது என போலீஸ் அதிகாரிக்குரிய தோரணை இல்லாமல் இருக்கிறார் வெற்றி. அவரின் சாது என்ற அடையாளமும், உதவும் குணமும் அந்த தயக்கங்களைத் தாண்டிய கதாபாத்திரத்துக்குரிய அம்சமாகவே மாறிவிடுவதால் காப்பாற்றுகிறது. நடிப்பில் வெற்றி கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அபர்ணா பாலமுரளி இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். தொலைக்காட்சியில் பணிபுரியும் இவர் பிரேக்கிங் செய்திக்காக, இன்னொருவரின் சிக்கலை செய்தியாகப் பயன்படுத்தும் விதம், அதற்கான நியாயத்தை நிறுவுவது, அதற்குப் பிறகும் நட்பைத் தொடர்வது என தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்.
மைம் கோபி, வினோத், டி.சிவா, ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள். நாசர் வழக்கம் போல தன் இருப்பை மிகச் சரியாக பதிவு செய்திருக்கிறார். ஜெய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டனும், கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லல்லுவும் பாத்திரத் தன்மை உணர்ந்து இயல்புமீறாமல் நடித்துள்ளனர்.
எம்.எஸ்.பாஸ்கர் தன் பலத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி, அபாரமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு டீ சாப்பிடலாமா என்று கேட்டு அவர் தன் வாழ்க்கை மீதான கஷ்டங்களை, வலிகளை உண்மையும் உருக்கமுமாகக் கூறும் விதம் உணர்வுப்பூர்வமானது. சமூகத்தின் மீதான கோபம், நல்லவன் வாழ்வான் என்பது போன்ற 'மித்' குறித்த சலிப்பு, பிள்ளைகள் மீதான சங்கடம், குடும்ப உறவின் மகோன்னத தருணங்கள் என பல விஷயங்களை வார்த்தைகளால் விவரிக்கும்போதே தேர்ந்த நடிகனாய் அடையாளப்படுத்திக் கொள்கிறார். எம்.எஸ்.பாஸ்கரை இனிவரும் தமிழ் சினிமா மேலும் கொண்டாடும்.
கறுப்பு வெள்ளையில் ஆரம்பிக்கும் படம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வெற்றியைக் காட்டும் போது வண்ணமயமாக மாறுவது, கொள்ளையடிக்கும் நபரின் விவரங்கள் குறித்த எந்தப் பின்புலத்தையும் சொல்லாமல் கதையை நகர்த்துவது, பிறகு மர்ம முடிச்சுகளை மெல்ல அவிழ்ப்பது என புத்திசாலித்தனமான திரைக்கதையால் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
எதிர்மறைக் கதாபாத்திரத்தின் தர்க்க நியாயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அசலாகப் பதிவு செய்த இயக்குநர் ஸ்ரீகணேஷ் தமிழ்சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களின் பட்டியலிலும் இடம் பிடிக்கிறார்.
தினேஷ் கே.பாபுவின் நேர்த்தியான ஒளிப்பதிவும், சுந்தரமூர்த்தியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். 'இதுபோல்..' பாடல் மட்டும் கதையுடன் பொருந்துகிறது. பின்னணி இசையை தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தி இருப்பது ரசனை.
''சும்மா சொல்லுவாங்க சார், நல்லதே செய் நல்லதே நடக்கும். நேர்மையா இருந்தா ஊரே புகழும். எல்லாம் சுத்தப் பொய்'', ''காயமும் வலியும்தான் மனுஷனுக்கு அவசியம். அதுமட்டும்தான் அவனை மாத்தும்'', ''நல்லவனா இருந்து என்ன பிரயோஜனம், கோயில் வாசல்ல விபூதி கடைதான் வைக்க முடியும்'', ''நான் நல்லவன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டுக்கிட்டு இருக்க முடியாது. உன்கிட்ட சொல்லத் தோணுச்சு'' போன்ற ஸ்ரீகணேஷின் வசனங்கள் படத்துக்கு வலு சேர்க்கின்றன.
இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்து, அழுத்தமில்லாத காதல் காட்சிகள், வேகத்தடையாக இருக்கும் பாடல்களுக்கு மட்டும் கத்தரி போட்டிருக்கலாம்.
இதை தவிர்த்துப் பார்த்தால் '8 தோட்டாக்கள்' இலக்கை எட்டிய சினிமாவாக பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது.