

‘கோச்சடையான்’ பட வெளியீட்டில் முறைகேடு செய்ததாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கில், லதா ரஜினிகாந்த் நான்கு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ படம் கடந்த 2014-ம் ஆண்டு மே 23-ம் தேதி வெளியானது. ‘அனிமேஷன்’ முறையில் கதாபாத்திரங்களைக் கொண்ட இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கினார்.
இப்படத்தை வெளியிடுவதற்கு முந்தைய தயாரிப்பு பணி மற்றும் வெளியீட்டு பொறுப்புக்கான உரிமம் சென்னையைச் சேர்ந்த ‘ஆட் பீரோ அட்வர்டைசிங் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வெளியீட்டு உரிமத்துக்கு ரூ.10 கோடி பெற்றுக் கொண்டு, ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற வேறு நிறுவனத்துக்கு உரிமத்தை மாற்றி வழங்கி விட்டதாக புகார் எழுந்தது. மேலும், வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்பு பணிக்காக ரூ.14.9 கோடிக்கு லதா ரஜினிகாந்த் ஒப்பந்தம் போட்டதாகவும் அதில் ரூ.8.7 கோடி மட்டும் கொடுத்துவிட்டு மீதி ரூ.6.2 கோடி ரூபாயை தராமல் ஏமாற்றியதாகவும் புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் பி.சி.பந்த் அடங்கிய அமர்வு, நான்கு வாரங் களுக்குள் லதா ரஜினிகாந்த் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு குறித்து ‘ஆட் பீரோ’ நிறுவனத்தின் வழக்கறிஞர் எல்.சி.துக், ‘தி இந்து’-விடம் கூறும் போது, ‘கோச்சடையான் படத்தை வெளியிட லதா ரஜினிகாந்த் எங் களது நிறுவனத்துக்கு 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி உரிமம் வழங்கினார். பின்னர், வேறு நிறு வனத்துக்கு உரிமம் வழங்கி விட்டார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, போலி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்காக பெங்களூர் நகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம். அதன்பேரில், ஹலசூரு கேட் காவல் நிலையத்தில் 2015-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்து போலீஸார் முறையாக விசாரணை நடத்தவில்லை. அதுமட்டுமின்றி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும்படி உத்தரவு பெற்றுள் ளார். இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய் துள்ளோம். அவர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது’ என்று தெரிவித்தார்.