

'8 தோட்டாக்கள்' படத்தைப் பார்த்துவிட்டு, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இயக்குநர் ஸ்ரீகணேஷ் ஆகியோரை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினி.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் '8 தோட்டாக்கள்'. வெள்ளபாண்டியன் தயாரிப்பில் உருவான இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டுள்ளது.
குறைந்த திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ரஜினியும் இப்படத்தைப் பார்க்க விரும்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து படக்குழுவும் அவருக்கு பிரத்யேகமாக திரையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
முழுப்படத்தையும் பார்த்துவிட்டு முதலில் எம்.எஸ்.பாஸ்கருக்கு தொலைபேசியில் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். ரஜினி என்ன கூறினார் என்பது குறித்து எம்.எஸ்.பாஸ்கரிடம் கேட்ட போது "என்ன பாஸ்கர்.. என்ன ஒரு நடிப்பு. பிச்சுட்டீங்க பாஸ்கர். அனைத்து படங்களிலுமே நன்றாக நடிப்பீர்கள். இப்படத்திலும் ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளீர்கள். ஸ்ரீகணேஷ் ரொம்ப அற்புதமாக இயக்கியுள்ளான்" என்று தெரிவித்தார் எம்.எஸ்.பாஸ்கர்
அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ரஜினி என்ன பேசினார் என்பது குறித்து ஸ்ரீகணேஷிடம் கேட்ட போது, "அற்புதமான படம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. என்ன மாதிரியான ஒரு திரைக்கதை, அற்புதமாக அனைவரிடமும் நடிப்பை வாங்கியுள்ளீர்கள். இந்தப் படத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டேன். அனைவருமே நன்றாக இருக்கிறது என்றவுடன் தான் பார்த்தேன். இவ்வளவு பேர் பாராட்டுவதற்கு தகுதியான படம் தான். இதே மாதிரி இன்னும் நிறைய நல்ல படங்களை நீங்கள் இயக்க வேண்டும். பெரிய வெற்றி உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய வாழ்த்துகள்" என்று தெரிவித்தார் ஸ்ரீகணேஷ்.