

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தமிழ் திரையுலகில் தற்போது வெளியாகும் ஒவ்வொரு படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்பது என்பது மிகவும் கடினம். பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே, பட வெளியீட்டுக்கு முன்பாகவே விற்பனையாகி வந்தன.
தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். மோகன்.ராஜா இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'வேலைக்காரன்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து வாங்கியுள்ளது.
தற்போது இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 29-ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
நயன்தாரா, ஃபகத் பாசில், விஜய் வசந்த், சினேகா, விஜய் வசந்த், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
இன்னும் டீஸர் மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்ட எதுவுமே வெளியாகாத நிலையில், 'வேலைக்காரன்' தொலைக்காட்சி உரிமை விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.