24 படத்துக்கு 2 தேசிய விருதுகள்: சூர்யா மகிழ்ச்சி

24 படத்துக்கு 2 தேசிய விருதுகள்: சூர்யா மகிழ்ச்சி
Updated on
1 min read

தான் தயாரித்து நடித்த '24' படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது குறித்து சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யா நடித்த '24' படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் என 2 தேசிய விருதுகள் கிடைத்தது.

விக்ரம் குமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா, சரண்யா பொன்வண்ணன், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படத்தை சூர்யா தயாரிக்க, ஞானவேல்ராஜா வெளியிட்டார்.

'24' படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா. அப்பதிவில் சூர்யா பேசியிருப்பது, "தேசிய விருது வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒட்டுமொத்த '24' குழுவினரும் தேசிய விருது அறிவிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். ஒளிப்பதிவாளர் திரு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர்களான அமித் மறும் சுப்ரோ ஆகியோரின் பணிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தேசிய விருது குழுவினர் அனைவருக்கும் எங்களுடைய படக்குழுவினரின் சார்பாக நன்றி.

ஏ.ஆர்.ரஹ்மான் சார் சொன்னது போல '24' எங்களுக்கு ஒரு முக்கியமான படம். அதை முடிப்பதில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தது. அவர்களுடைய முந்தைய படங்களுக்கும் சேர்த்து கிடைத்த ஒரு மரியாதையாகத் தான் பார்க்கிறோம்.

மனதுக்கு பிடித்த ஒரு படத்துக்கு தேசியளவில் அங்கீகாரம் கிடைக்கும் போது ரொம்ப ஊக்குவிப்பாக இருக்கிறது. இது போன்ற மனதுக்கு நெருக்கமான படங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in