

ரஜினிகாந்த் தனது சட்டையில் படிந்திருக்கும் தூசை தட்டிவிட்டால்கூட அதுவும் ஒருவித ஸ்டைல் எனக் கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் ’2.0’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் அக்ஷய்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிவடைந்துள்ளது. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் '2.0' படத்தில் பணியாற்றிய தனது அனுபவங்களை அக்ஷய்குமார் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் அவர், "வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் ரஜினி சாருக்கே வில்லன் என்றால் இன்னும் மகிழ்ச்சியே. ஏனென்றால் நான் அடிவாங்கியது ஒரு புதுமுக நடிகரிடம் இல்லை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம்.
எனவே '2.0' வில்லன் பாத்திரத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். ரஜினி சார் என்ன செய்தாலும் அது தனி ஸ்டைல். ஒருமுறை சென்னைக்குச் சென்றிருந்தேன். ரஜினி சார், ஷங்கர் சார் மற்றும் நான் இருந்தோம். எங்களைத் தவிர வேறு சிலரும் இருந்தனர். ஆனால், அவர்கள் எனக்கு அறிமுகம் இல்லை. அப்போது ரஜினி சார் அவர் கால் மீது கால் போட்டு அமர்ந்தார். அனைவரும் அதைப் பார்த்து ரசித்தனர். சட்டையில் இருந்த தூசை தட்டிவிட்டார். அதுகூட அவ்வளவு ஸ்டைலாக இருந்தது. அங்கிருந்தவர்கள் அதைப் பார்த்து கண்களில் ஜாடை காட்டி ரசித்தனர்.
உடனே நானும் என் சட்டையை அப்படி இப்படி தட்டிவிட்டுப் பார்த்தேன். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. ரஜினி என்றாலே ஸ்டைல்தான். அவருடைய ’கபாலி’ படத்துக்காக காத்திருக்கிறேன். அந்தப் படத்தின் பாடல்களைத் தான் நான் இப்போதெல்லாம் அடிக்கடி கேட்டு வருகிறேன்.
அதேபோல் இயக்குநர் ஷங்கரைப் பற்றியும் சொல்ல வேண்டும். அவர் வெறும் இயக்குநர் அல்ல. அவர் ஒரு விஞ்ஞானி. சினிமாவில் புதுமைகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்.
தமிழ்ப்படங்களில் இதுவரை பாலிவுட்டில் இருந்து சென்ற ஹீரோயின்கள் தான் அதிகம். முதல்முறையாக நான் தமிழுக்குச் சென்ற பாலிவுட் ஹீரோவாகியுள்ளேன். தமிழ்ப்படத்தில் நடித்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி" என்று தெரிவித்திருக்கிறார் அக்ஷய்குமார்.