

ஷாகித் கபூர், கரினா கபூர், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'உட்தா பஞ்சாப்'. இப்படத்துக்கு தணிக்கை குழுவில் சர்ச்சையாகி இன்று வெளியாகி இருக்கிறது.
மேலும், இப்படத்தின் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட படம் இணையத்தில் வெளியானது. இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்தது. இந்தி திரையுலகினர் ஒட்டுமொத்தமாக சமூக வலைத்தளத்தில் இப்படத்தை திரையரங்கில் மட்டுமே பார்க்குமாறு குரல் கொடுத்தனர்.
'உட்தா பஞ்சாப்' திரைப்படம் புதுச்சேரியில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது. இதனால் தமிழ் திரையுலகினர் இப்படத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். "திருட்டு விசிடிக்கு எதிராக போராடுவோம்!! வெளியாக ஒரு படத்தை கசியவிடும் இந்தக் குற்றச் செயல் குறித்து விழிப்புணர்வை பரப்புவோம்!!" என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் ஒட்டுமொத்தமாக திரைப்பட தயாரிப்பாளர்கள் இப்படத்துக்கு ஆதரவாக ஒன்று திரண்டார்கள். இதில் பல்வேறு தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விஷால் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியது, "'உட்தா பஞ்சாப்' படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியானது அதிர்ச்சியளிக்கிறது. முதலில் திருட்டு டி.வி.டியை கட்டுப்படுத்தி ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை. தமிழ் திரையுலகில் ஒன்றாக கூடி இன்று பேசினோம். அதில் எந்த திரையரங்கில் இருந்து திருட்டு டி.வி.டி தயாரிக்கப்படுகிறதோ அந்த திரையரங்கிற்கு தடை விதிப்பது தொடர்பாக பேசியிருக்கிறோம்.
இன்றைக்கு 'உட்தா பஞ்சாப்' படத்துக்கு நடந்தது, நாளை யாருடைய படத்துக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படம் வெளியானதற்கு தணிக்கைக் குழு தான் காரணம் என்ற முடிவை இப்போதே சொல்லிவிட முடியாது. தமிழ் திரையுலகில் இன்று 2 படங்கள் வெளியாகி இருக்கிறது. அப்படங்கள் திருட்டி டி.வி.டி மாலையில் வெளியாகிவிடும். ஒவ்வொரு திரையரங்கிற்கும் படம் அனுப்புவதில் ஒரு CODE இருக்கிறது. அதன் மூலமாக தங்களுடைய படம் எந்த திரையரங்கில் இருந்து வெளியாகிறது என்பதை கண்டுபிடிக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுத்தால் 50% முதல் 70% திருட்டு டி.வி.டிகளை ஒழிக்கலாம்.
இந்த விஷயத்தில் அனைவருக்குமே ஒரு பயம் ஏற்பட்டு இருக்கிறது. கோடிகளைக் கொட்டி படம் எடுக்கிறோம். அப்படம் வெளியான 4 மணி நேரத்தில் இணையத்தில் கிடைக்கிறது என்றால் எவ்வளவு பெரிய நஷ்டம் என்பதை உணர வேண்டும். இதற்கு சிறந்த முறையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தற்போது வரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.