

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, மகேஷ் மஞ்சுரேகர் என பல்வேறு நடிகர்களைக் கொண்டு விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் படம் 'ஆரம்பம்'. யுவன் இசையமைக்க, ஒம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.
'பில்லா' படத்திற்கு விஷ்ணுவர்தன் - அஜித் இணைகிறார்கள் என்ற செய்தி வந்ததில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது. படத்தின் பெயர் அறிவிக்காமல், படப்பிடிப்பினை துவங்கினார்கள். படத்திற்கு #Thala53 என்று பெயரை வைத்து தொடர்ச்சியாக மும்பை, பெங்களூர், துபாய், சிம்லா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படத்தின் FIRST LOOK TEASER வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த புகைப்படங்கள், 'ஆரம்பம்' என பெயர், வந்த ஒவ்வொன்றுமே படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிடைக்கும் வகையில் இருந்தது.
துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித் நடித்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன், 'அஜித் என்ன வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இப்போதைக்கு எதையும் கூற முடியாது. அஜித், ஆர்யா, நயன், டாப்ஸி, ராணா என்னென்ன வேடத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதை நான் கூறினால் நீங்கள் படத்தின் கதையை எழுதிவிடலாம். இது அந்த மாதிரி கதை' என்று கூறிவிட்டார்.
தொடர்ச்சியாக ஒன்றரை ஆண்டுகள் வரை படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அஜித் படம் என்றால் ஒப்பனிங் அட்டகாசமாக இருக்கும் என்பதால் பல்வேறு பகுதி உரிமைக்கு கடுமையான போட்டி நிலவி வந்தது.
தமிழ்நாட்டில் NSC ஏரியா எனப்படும் பெரிய விநியோக ஏரியா உரிமைய ஐங்கரன் நிறுவனம் வாங்கியது. அவர்களிடம் இருந்து தற்போது பெரிய விலைக் கொடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி தியேட்டர் ஒப்பந்தம் தொடங்கிவிட்டார்கள்.
மாயாஜாலில் ஒரு நாளைக்கு 91 ஷோக்கள் திரையிடலாம். 'ஆரம்பம்' வெளியாகும் நாளன்று 91 ஷோக்களுமே 'ஆரம்பம்' தான் திரையிட இருக்கிறார்கள். சென்னையில் பல்வேறு திரையரங்குகள் இரண்டு நாட்களுக்கு மட்டும் 'ஆரம்பம்' திரையிட முடிவு செய்திருக்கிறார்கள். தீபாவளியன்று 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'பாண்டிய நாடு' ஆகிய படங்கள் வெளியாவதால் இம்முடிவை எடுத்திருக்கிறார்கள்.
தமிழ் திரையுலக பாக்ஸ் ஆபிஸில், 'ஆரம்பம்' படத்தின் கலெக்ஷன் புதிய சாதனை படைக்கும் என்று பேச்சு நிலவி வருகிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி விஜய் ரசிகர்களும், 'ஆரம்பம்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து மதுரையில் விளம்பர பலகை வைத்திருக்கிறார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு, 'ஆரம்பம்' அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.