

'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்ட பணிகளை படக்குழு துவங்கியுள்ளது. இந்தாண்டுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
'விஸ்வரூபம்' வெளியான உடனே, 'விஸ்வரூபம் 2' படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
'விஸ்வரூபம் 2' படத்திற்கான பணிகளை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாமதப்படுத்தியதால், 'உத்தம வில்லன்', 'பாபநாசம்' ஆகிய படங்களில் தொடர்ச்சியாக கமல் நடித்து வந்தார். 'உத்தம வில்லன்', 'பாபநாசம்', 'தூங்காவனம்' என கமல் நடிப்பில் உருவான படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் 'விஸ்வரூபம் 2' வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்தது.
தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து கமலே கைப்பற்றியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். இதனால் விரைவில் படத்தின் டப்பிங் உள்ளிட்ட இதர இறுதிகட்ட பணிகள் துவங்கும் என தெரிவித்தார்கள்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 19) முதல் 'விஸ்வரூபம் 2' படத்தில் முடிக்க வேண்டிய பணிகள் அனைத்தையும் தொடங்கியுள்ளது படக்குழு. இதனால் இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என தெரிகிறது.
'விஸ்வரூபம் 2' முடித்துவிட்டு, 'சபாஷ் நாயுடு' பணிகளை கமல் துவங்குவார் என தெரிகிறது. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.