

தமிழகத்தின் மாஸ் நடிகரும் கேரளாவின் கிளாஸ் நடிகரும் இணைந்திருப்பதால் கதையம் சத்துடன் சற்று கலையம்சமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தந்த படம். ஆனால், படத்தில், ஐ.பி.எஸ். அதிகாரியின் காரை, நடுரோட்டில் மறித்து, அவரது கையை வெட்டுகிறார் நாயகன். எதிரிகளைக் காருடன் மலையிலிருந்து தள்ளிவிடுகிறார். சக பெண் அதிகாரியிடம் அத்துமீறுகிறார். வன்முறையும், ஆபாசமும் நிறைந்த இதுபோன்றக் காட்சிகளைத் தெலுங்கு மசாலா படங்களில் சகஜமாகக் காணமுடியும். இந்த நோய் தற்போது தமிழ்ப்படங்களுக்கும் பரவிவிட்டதற்கு சிறந்த உதாரணமாக வந்திருக்கிறது ஜில்லா.
சிறுவயதில் கண்முன்னால் தனது தந்தையை இழக்கிறார் சக்தியாக வரும் விஜய். அப்பாவின் சாவுக்குப் போலீஸே காரணம் என்ற எண்ணம் விஜய் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. ஆதரவற்று நிற்கும் சிறுவன் விஜயை, வளர்த்து ஆளாக்குகிறார் மோகன்லால். இவர் மதுரை மாவட்டத் துக்கே ஒரு குறுநில மன்னர் மாதிரி ஆள்பலமும், படைபலமும் கொண்ட தாதா. அவரது வலதுகையாக வளர்ந்து நிற்கிறார் விஜய். இதற்கிடையில் காஜலைப் புடவையில் பார்த்து காதல் கொள்ளும் விஜய், அவரது வீட்டுக்குப் பெண்கேட்கச் செல்கிறார். காவல் சீருடையில் காஜல் வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்க்கும் விஜய், சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிடும் அளவுக்குப் போலீஸை வெறுக்கிறார்.
அப்படிப்பட்ட விஜயை, அப்பா மோகன்லாலே குறுக்கு வழியில் போலீஸ் அதிகாரி ஆக்குகிறார். அப்பாவின் சாம்ராஜ்யத்துக்குப் பாது காப்பு அரணாக காவல்துறையிலும் தன் கடமையைத் தொடர்கிறார். நகரின் நடுவே இயங்கும் ஒரு எரிவாயுக் கூடம் வெடித்துச் சிதறுவதில் கண்முன்னால் உயிரிழப்புகளைப் பார்க்கும் விஜய் மனதில் திடீர் மாற்றம். வேலையைப் பொறுப்புடன் பார்க்க ஆரம்பிக்கும் விஜய், அந்த சம்பவத்துக்குக் காரணமான தனது வளர்ப்புத் தந்தை மோகன்லாலை நேர்மையான பாதைக்குத் திரும்புபடிக் கேட்க, மோகன்லால் மறுக்கிறார். அப்பாவும் - பிள்ளையும் எதிரி ஆகின்றனர். அவர்களைத் திட்டமிட்டு எதிரியாக்கிய வில்லன் இரண்டாவது பாதியில் தன் முகத்தைக் காட்ட, அவனை அப்பாவும் மகனும் சேர்ந்து முறியடித்து மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் நேசன் லாஜிக் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் விறுவிறுப்பாக படத்தைக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துவிட்டார் போலும். இரண்டு பெரிய நடிகர்களைப் பயன்படுத்தும்போது, கனமானக் கதாபாத்திரங்களை உருவாக்கி யிருக்க வேண்டும். ஆனால் அந்தக் கதாபாத்திரங்களை சித்தரித்த வகையில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். காஜல் அகர்வால் - விஜய் இடையிலான காட்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றன.
விஜய் ரசிகர்களுக்குப் போதிய மசாலா தீனிபோடும் படம்தான் என்றாலும், முதல்பாதியில் விளை யாட்டாக இருக்கும் விஜய் பொறுப்பை உணர்ந்த போலீஸாக மாறிய பிறகாவது தனது நையாண்டிகளையும் கோமாளித்தனங்களையும் குறைத்துக் கொண்டிருக்கலாம். பல காட்சிகளில் காக்கிச்சட்டை போட்ட கல்லூரி மாணவன் போல் தெரிகிறார். எனினும் விஜயின் வழக்கமான ப்ளஸ்களான சண்டை மற்றும் பாடல்காட்சிகளில் அவரது வேகம் ரசிக்கவைக்கிறது.
இத்தனை எதிர்மறையான கதா பாத்திரத்தில் மோகன்லால் துணிந்து நடித்ததைப் பாராட்டியே ஆகவேண்டும். இது ’விஜய் படம்’ தான் என்பதை உணர்ந்தே நடித்திருக்கிறார். படத்தில் சூரி, தம்பி ராமையா என்று இரண்டு காமெடியன்கள் இருந்தும், அவர்கள் வேலையை முழுமையாக விஜயே எடுத்துக் கொண்டிருப்பதில் இவர்கள் எடுபடாமல் போய்விட்டார்கள். படத்தில் பளிச்சென்று தெரிபவர் இசையமைப்பாளர் இமான். கொண்டாட்டமான இசையைக் கொடுத் திருக்கிறார்.
என்னதான் பணத்தைக் கொட்டி படமெடுத்தாலும் அதில் நம்பகத்தன்மை இல்லாவிட்டால், ரசிகர்களிடம் எடுபடாது. அடிப் படையான லாஜிக்குகளை இன்னும் வலுவாக்கியிருந்தால், ஜில்லா, விஜய்க்கு இன்னொரு கில்லியாகி யிருக்கும்.