Last Updated : 24 May, 2017 12:54 PM

 

Published : 24 May 2017 12:54 PM
Last Updated : 24 May 2017 12:54 PM

சிபிராஜ் திரையுலக வாழ்வில் சத்யா ஒரு திருப்புமுனை: இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை

சிபிராஜுக்கு அவருடைய திரையுலக வாழ்வில் 'சத்யா' நிச்சயம் திருப்புமுனை படமாக அமையும் என்று இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'சைத்தான்' படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. தெலுங்கில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஷணம்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய தீர்மானிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.

சத்யராஜ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலெட்சுமி சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அருண்மணி ஒளிப்பதிவு செய்ய, சைமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கமலிடன் அனுமதி பெற்று, 'சத்யா' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

இப்படம் குறித்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதாவது:

"’சத்யா’ என்ற தலைப்பே மிகவும் சக்திவாய்ந்தது. கமல நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சத்யா'. கமல் சாருக்கும் 'சத்யா' அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதே போல் இந்த 'சத்யா' சிபிராஜுக்கு அவருடைய திரையுலக வாழ்வில் நிச்சயம் திருப்புமுனை படமாக இருக்கும்.

'சத்யா' படத்தின் தலைப்பு 'ராஜ்கமல் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் பெயரில் பதிவாகி இருந்தது. கமல் சாரிடம் நாங்கள் இந்த தலைப்பு கேட்டவுடன் எங்களுக்கு கையெழுத்திட்டு கொடுத்தார். அவருக்கு படக்குழுவினர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர். இதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கியுள்ளோம். தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'ஷணம்' திரைப்படத்தின் ரீமேக் தான் 'சத்யா'. தெலுங்கில் வெளிவந்த 'ஷணம்' திரைப்படம் வழக்கமான தெலுங்கு திரைப்படம் போல் இருக்காது , அது புதுமையான ஒரு கதைக்களமாகும். தமிழுக்காக கதையில் புதிதாக நிறைய விஷயங்களை சேர்த்து உருவாக்கியுள்ளோம்.

படத்தின் நாயகியாக ரம்யா நம்பிசீன் நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும் , ஆனந்த் ராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் வரலெட்சுமி கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் ஒன்றாகும். இதுவரை சிபிராஜ் 12 படங்களில் நடித்துள்ளார் , அவருடைய லுக்கை மாற்றி புதிதாக காட்ட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையாக இருந்தது. இதை நான் அவரிடம் கூறியதும் , நிச்சயமாக நீங்கள் என்ன சொன்னாலும் செய்யலாம் என்று முன்வந்தார். இந்த லுக்குக்காக நேரமெடுத்து காத்திருந்து படப்பிடிப்புக்கு சென்றோம்.

இந்த கதைக்கு தேவை என்று நான் கேட்ட நடிகர்கள் எல்லோரையும் சிபிராஜ் எனக்கு கொடுத்துள்ளார். ரம்யாவுக்கு இப்படம் பெரிய பெயர் வாங்கி தரும். இந்த படம் மிக சிறந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்று நிச்சயமாக கூறமுடியும். எனக்கு கமர்ஷியல் திரைப்படம் எடுக்க தெரியாது என்று நினைத்து கொண்டிருந்தேன். படத்தை இப்போது பார்க்கும் போது, ஊக்குவிக்கும் வகையில் வந்துள்ளது. படத்தின் கதைப்படி க்ரைம் ஒன்று நடக்கும் , அப்படி அது நடக்கும் போது எப்போதும் அது போலீஸின் பார்வையில் செல்வது போல் தான் கதை இருக்கும். ஆனால் இந்த கதை சத்யா என்ற சாதாரணமான ஒரு நபரின் பார்வையில் செல்வது போல் இருக்கும். குழந்தை ஒன்று காணாமல் போனதில் இருந்து அதை கண்டுபிடிப்பது வரை செல்லும் இந்த கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும்.

நான் இன்னும் தயாரிப்பாளர் சிபிராஜை பார்க்கவே இல்லை. படத்தில் அவர் நடித்ததை பொறுத்தவரை எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். முத்த காட்சி ஒன்றில் அவர் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றுக்கு லிப் லாக் முத்த காட்சி தேவையானதாக இருந்தது , சிபிராஜிடம் நான் அந்த காட்சியில் நடிப்பது பற்றி கூறியதும் என்னால் நடிக்க முடியாது சாரி என்று கூறிவிட்டார். நான் எவ்வளவோ அவரிடம் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியும் அதில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அந்த லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்ததற்கான காரணம் “ அவருடைய மகன் அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது “ என்பதால் தான். 'சத்யா' திரைப்படம் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது" என்றார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x