

வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்கும் வகையில் தெர்மாகோலால் மூடிய சம்பவத்தை கமல் மற்றும் ராதாரவி இருவருமே கேலி செய்து பேசினார்கள்.
ஐக் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, ராதாரவி, தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல் கலந்து கொண்டு இசையை வெளியிட படக்குழு பெற்றுக் கொண்டது.
இவ்விழாவில் பேசிய கமல், "’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் டிரைலரை மற்றவர்கள் பார்க்கும் முன்பாகவே நான் பார்த்து விட்டேன். இப்படி சொல்வதில் ஒரு பெருமை இருக்கிறது. முதலில் பார்த்துவிட வேண்டும் என்ற மனப்பான்மை காரணமாகத்தான் திருட்டு வி.சி.டி.க்கள் அதிகம் வருகின்றன.
இப்படத்தில் இன்னொரு பெருமை என்னவென்றால் என்னோடு சம்பந்தப்பட்டவர்கள், வேலை செய்தவர்கள் இதில் பணியாற்றி இருக்கிறார்கள். முக்கியமாக படத்தின் இயக்குநர் ஐக். இவர் மூன்றாம் தலைமுறை சினிமாக்காரர். ட்ரெய்லர் சிறப்பாக இருக்கிறது. இது ஆவி வந்த கதை என்றார்கள். தெர்மாகோல் வைத்து மூடாமல் நல்லபடியாக செய்துள்ளார்கள் என்று நம்புகிறேன். ஆவி என்றவுடன் தெர்மாகோல் ஞாபகம் வந்துவிட்டது" என்று பேசினார் கமல்.
அவரைத் தொடர்ந்து பேசிய ராதாரவி, "வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோலால் மூடிய சம்பவத்தை கமல் ஞாபகப்படுத்தினார். இப்போதெல்லாம் அரசியல் பேச ஆரம்பித்து இருக்கிறார் கமல்.
தெர்மாகோலை அந்த அம்மாவின் (ஜெயலலிதா) உடலில் போர்த்தி மூடி இருந்தால் அவரது ஆவியும் போய் இருக்காது. நானும் அந்த அம்மாவை நம்பி இருந்தவன் என்பதால் இதனை சொல்கிறேன்" என்று பேசினார் ராதாரவி.
வைகை அணையில் இருந்து தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோல் மிதக்க விடும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப் பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெர் மோகோல்களை அணையில் மிதக்க விட்டார்.
அணைப் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மிதக்கவிடப்பட்ட தெர்மோகோல் ஒரு மணி நேரத்தில் கரை ஒதுங்கின. அணைப் பகுதியில் இருந்து அமைச்சர் புறப்படும் முன்பே தெர்மோகோல் திட்டம் தோல்வியடைந்தது உணரப்பட்டது. இதனால், திட்டச் செலவு ரூ.10 லட்சம் வீணானதாகவும், அமைச்சர் செல்லூர் ராஜூவின் தவறான யோசனையால்தான் இந்நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இது பொதுப்பணித் துறை உட்பட அரசுத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.