

அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ்பேக் வைத்த நாயகன் அருண் விஜய். தொடர்ச்சியாக பல படங்களில் அருண் விஜய் நடித்து வந்தாலும் அஜித்துடன் அவர் நடித்த 'என்னை அறிந்தால்' படம் அருண் விஜய்க்கான மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.
எதிர்மறைக் கதாபாத்திரம் என்றெல்லாம் அருண் விஜய் அப்போது கவலைப்படாமல் நடித்தார். அதற்காகவே அருண் விஜய்யை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று அப்போதே கௌதம் மேனன் அறிவித்திருந்தார். அருண் விஜய்யின் 'வா' பட இசை வெளியீட்டு விழாவிலும் கௌதம் மேனன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா', விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்' ஆகிய இரு படங்களை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு அருண் விஜய்யை கௌதம் மேனன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.