

வரிச்சலுகைக்காக 'பவர் பாண்டி' என்ற பெயரை 'ப.பாண்டி' என மாற்றியுள்ளது படக்குழு.
தனுஷ் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'பவர் பாண்டி'. ராஜ்கிரண் நாயகனாக நடித்து வரும் இப்படத்தில் தனுஷ், மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் கவுதம் மேனன், 'விஜய் டிவி' திவ்யதர்ஷினி, வித்யூலேகா ஆகியோர் கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ளனர்.
வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் கதைக்களம் அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் (ஸ்டண்ட்மேன்) ஒருவரைப் பற்றிய கதையாகும். இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை 'பவர் பாண்டி' என்பதலிருந்து 'ப.பாண்டி' என மாற்றியுள்ளது படக்குழு. தற்போது வெளியாகும் விளம்பரங்கள் அனைத்திலுமே 'ப.பாண்டி' என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே வரிச்சலுகை கிடைக்கும் என்பதால், இம்முடிவை படக்குழு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14 வெளியீடாக இப்படம் வெளிவரும் என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.