

'கோச்சடையான்' மற்றும் 'வீரம்' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.
ரஜினி, தீபிகா படுகோன் நடித்திருக்கும் 'கோச்சடையான்' படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று நவம்பர் 14ம் தேதி அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து 'ஜில்லா', 'வீரம்', 'பிரியாணி' உள்ளிட்ட படங்கள் அதே தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி நிலவியது.
திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் ரஜினி படத்திற்கு தான் முன்னுரிமை அளிப்பார்கள். இதனால் விஜய், அஜித், கார்த்தி ஆகியோரின் படங்கள் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 'வீரம்' படத்தின் தயாரிப்பாளர் நவம்பர் 14ம் தேதி மாலையே, படம் திட்டமிட்டது போலவே பொங்கலுக்கு வெளிவரும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.
'ஜில்லா' பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்து, விநியோக உரிமை அனைத்தையும் கொடுத்துவிட்டார்கள். ஆனால் 'கோச்சடையான்' வெளிவரும் என்று அறிவித்த பிறகு, ஜில்லா பொங்கலுக்கு கண்டிப்பாக வெளிவருமா என்று அறிவிக்கவில்லை.
'பிரியாணி' படத்தின் நிலைமையும் இதே தான். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடலாமா என்று ஆலோசனையிலும் 'பிரியாணி' படக்குழு இறங்கியிருக்கிறது.
இதனால், இப்போதைக்கு பொங்கலுக்கு 'கோச்சடையான்', 'வீரம்' ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. எனவே, பொங்கலுக்கு போட்டி கோச்சடையான் Vs வீரம்.
'ஜில்லா', 'பிரியாணி' ஆகிய படங்களின் வெளியீட்டு நிலைமை என்ன என்பது புரியாத புதிராக இருக்கிறது.