ஜோக்கரில் சினிமா வரையறையை பின்பற்றவில்லை: இயக்குநர் ராஜுமுருகன் பேட்டி

ஜோக்கரில் சினிமா வரையறையை பின்பற்றவில்லை: இயக்குநர் ராஜுமுருகன் பேட்டி
Updated on
2 min read

‘‘படைப்பாளிகளுக்கு ‘ஜோக்கர்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு துணிவைக் கொடுத்திருக்கிறது. ‘யார் என்ன சொல்வார்களோ’ என்று பயப்படாமல் இனி வசனம் எழுதுவார்கள்’’ என்று நம்பிக்கையுடன் பேச்சைத் தொடங்கினார் இயக்குநர் ராஜுமுருகன். ‘ஜோக்கர்’ வரவேற்பைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான ஓட்டத்தில் இருந்தவரை நிறுத்திப் பேசியதில் இருந்து..

‘ஜோக்கர்’ படத்துக்காக உங் களுக்கு கிடைத்த பாராட்டு பற்றி..

படம் பார்த்தவர்கள், விலகாத மவுனத்தோடு வந்து விவாதிக் கிறார்கள். அதுவே ஒரு வெற்றி தான். படைப்பாளியால் எதற்கும் தீர்வு சொல்ல முடியாது. ஆனால், எந்த படைப்பும் ஒரு விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். அதுதான் என் நோக்கம். தவிர, நல்லகண்ணு ஐயா, சகாயம் சார், திருமாவளவன் அண்ணன், தமிழருவி மணியன், அற்புதம்மாள், ஜி.ராமகிருஷ் ணன், சிவகுமார் சார் என நான் மதிக்கும் பலர் இப்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார் கள். முக்கியமாக ரஜினி சார் போன் பண்ணி ‘‘ரொம்ப தில்லான படம். நிச்சயம் சந்திப்போம்’’ என்றார்.

மக்கள் மனத்தை இப்படம் மாற்றுமா?

படத்தைப் பார்த்துவிட்டு நல்ல கண்ணு ஐயா ஓர் ஓவியத்தைப் பரிசாக அளித்தார். ‘‘விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லாவிட்டால் உரம்!’’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதுதான் ஒரு படைப்பாளியின் வேலை. விதைத்துக்கொண்டே இருப்போம். அது முளைத்து மரமாவதோ, முளைக்காமல் உர மாவதோ மண்ணின் கையில் இருக்கிறது. சமூக மாற்றத்துக் கான முயற்சியில் ‘ஜோக்கர்’ ஒரு சிறிய பங்களிப்பு. அதேநேரம், ஒரு சில மனங்களையாவது மாற்றத்தை நோக்கி இப்படம் அழைத்துச் செல்லும் என்பது என் நம்பிக்கை.

‘ஜோக்கர்’ கதைக்கான தூண்டுதல் எது?

அரசியலை சமூகமயமாக்க வேண்டும் என்பது என் நோக்கம். பலருக்கு அரசியல் புரியாது. தருமபுரி அருகே உள்ள கிராமங் களில் கட்டி கட்டி பாதியில் விடப் பட்ட கழிவறைகளைப் பார்க்க லாம். முழு பணத்தையும் வாங்கிக் கொண்டு, பாதி கட்டிவிட்டு போய் விடுவார்கள். பாத்திரம் கழுவவும், துணி துவைக்கவும் அந்த இடத் தைப் பயன்படுத்துவார்கள். இதை வைத்தே ஒரு கதை செய்து விடலாம் என்று எழுத ஆரம்பித்தேன்.

படத்தை தேர்தலுக்கு முன்பு வெளியிடத் திட்டமிட்டிருந்தீர் களே? தள்ளிப்போனதற்கு எதிர்ப்பு எதுவும் காரணமா?

உண்மையில், அப்போது படம் தயாராகவில்லை. அவசரமாக முடிப்பதிலும் எனக்கு உடன்பா டில்லை. எதிர்ப்பு வருமோ என்ற யோசனை இருந்தது உண்மை தான். ஆனால், ‘ஜோக்கர்’ படத் தைப் பொறுத்தவரை தணிக்கைக் குழுவில் தொடங்கி எந்தவொரு எதிர்ப்பும் இல்லை.

ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறதாமே..

தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடக்கிறது. எனக்கு இந்தியில் ரீமேக் செய்ய ஆசை. ஆனால், அதை நான் இயக்குவேனா என்பது தெரியாது.

இறுதிக் காட்சியைப் பார்த் தால் ‘ஜோக்கர் 2’ வர வாய்ப்பு இருப்பதுபோல தெரிகிறதே..

10-வது நிமிடத்தில் கதை ஆரம் பிப்பது உட்பட சினிமாவுக்கான எந்த வரையறையையும் இப்படத்தில் நான் பின்பற்ற வில்லை. 2-ம் பாதியில் கதை எதை நோக்கி பயணிக்கிறது என்ற த்ரில்லர் விஷயங்கள் எதுவுமே இருக்காது. இப்படித்தான் இருக்க வேண்டும் என எழுதினேன். இது என் தன்னியல்பு சினிமா. மன்னர் மன்னனுக்கு விபத்து நடந்த உடனேயோ, மு.ராமசாமி ஐயா பேசி முடித்ததுமோ படத்தை முடித் திருக்கலாம். ‘‘நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா’’ என்று வரும் காட்சியில் படம் முடியவேண்டும் என்று விரும்பி எழுதினேன். அதைதான் எடுத் தேன். ‘ஜோக்கர் 2' குறித்து யோசிக் கவே இல்லை. அப்படியெல்லாம் யோசித்து இறுதிக் காட்சியை வைக்கவில்லை.

அடுத்தடுத்து இயக்குவதும் அரசியல் விமர்சனப் படைப்புகள் தானா?

உண்மையில் அரசியல் தொடர்பான விஷயங்களில்தான் பயணித்தும், எழுதிக்கொண்டும் இருக்கிறேன். வழக்கமாக செய்வதை சினிமாவில் முதல் முறையாக செய்திருக்கிறேன். அவ்வளவுதான். எனக்கு அதில் விருப்பம் அதிகம். ‘குக்கூ’விலும் சில அரசியல் வசனங்கள் இருக் கும். நியாயத்தை வலியுறுத்தும் வகையில் எதைப் பற்றி வேண்டு மானாலும் படம் எடுப்பேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in