இயக்குநர்கள் பொறுப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: வசந்தபாலன்

இயக்குநர்கள் பொறுப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: வசந்தபாலன்
Updated on
1 min read

இந்த சூழலில் இயக்குநர்கள் பொறுப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்தார்.

கீரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மெர்லின்'. விஷ்ணு பிரியன், அஸ்வினி, தங்கர் பச்சான், மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் டீஸர் மற்றும் விளம்பர பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் வசந்தபாலன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் படக்குழுவினரோடு கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் வசந்த பாலன், "நண்பன் நா. முத்துகுமார் இறந்த பின்னர் சிரிக்க மறந்திருந்தேன். சிங்கம் புலியின் பேச்சு என்னை சிரிக்க வைத்தது. மிக மோசமான காலகட்டத்தில் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு தலைக் காதலால் பெண்களை கொலை செய்கிறார்கள். இந்த சூழலில் இயக்குநர்கள் பொறுப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்று தெரிவித்தார்.

இயக்குநர் ரஞ்சித் பேசும் போது, "ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சினிமா வந்து அந்த காலகட்டத்தை புரட்டிப்போடும். ’பராசக்தி’யில் அதை பார்த்தோம். இப்போது பேய் படங்கள் ஒரு பக்கம் ஒடினாலும் ’காக்கா முட்டை’, ’ஜோக்கர்’ மாதிரியான சமூக முரண்பாடுகளை பேசும் படங்களும் மக்களை சென்று சேருகிறது.

’மெர்லின்’ படத்தின் டீஸர் மற்றும் விளம்பரப் பாடலை பார்த்தேன். பிரமாதமாக வந்திருக்கிறது. மற்ற பேய் படங்களை காட்டிலும் ’மெர்லின்’ வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in