

ஏப்ரல் 28-ம் தேதி 'பாகுபலி தி கன்க்ளூஷன்' வெளியாகவுள்ள நிலையில், 'பாகுபலி' முதல் பாகத்தை மறுவெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2'க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'-ல் விடை தெரியவிருக்கிறது.
இத்திரைப்படம் ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மார்ச் 16-ம் தேதி காலையில் சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இந்தியளவில் அனைத்து மொழி ட்ரெய்லரும் சேர்த்து, அதிகம் பேர் பார்த்த ட்ரெய்லர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும், இந்தியாவில் உருவான படங்களின் ட்ரெய்லர்களில் 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்தது என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது 'பாகுபலி 2'.
இந்நிலையில் 'பாகுபலி தி கன்க்ளூஷன்' வெளியாகவுள்ள நிலையில், 'பாகுபலி' முதல் பாகத்தை மீண்டும் மறுவெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்து 'பாகுபலி' படத்தின் இந்தி உரிமையை வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் "ஒரு பெரும் இதிகாசத்தை மீண்டும் நினைவுகூர வேண்டிய தருணம் இது. இதுவரை அந்தப் பிரம்மாண்டத்தை பார்த்திராதவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர். பாகுபலி 7-ம் தேதி வெளியாகிறது" என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மறுவெளியீடு இருக்கும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.