

இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களில் 'தங்கமீன்கள்' திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
ராம் இயக்கத்தில் கெளதம் மேனன் தயாரித்த படம் 'தங்க மீன்கள்'. இப்படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆகியும், கெளதம் மேனனுக்கு இருந்த பண நெருக்கடி காரணமாக வெளியாகாமல் இருந்தது. பின்னர் ஜே.எஸ்.கே சதீஷ் இப்படத்தினை வாங்கி வெளியிட்டார்.
'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இப்படம் வெளியானது. ஆனால், விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது.
தற்போது கோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவிலும், குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இப்படம் தேர்வாகியிருக்கிறது.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கும் ஒரே தமிழ் படம் 'தங்க மீன்கள்' மட்டுமே.
இந்த அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. இயக்குநர் ராம் இச்செய்தியினை தனது ட்விட்டர் தளம் மூலம் பகிர்ந்துள்ளார். “சமீப காலத்தில் சர்வதேச அளவில் தயாரான குழந்தைகள் படங்களில் எனது படமும் திரையிட தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி” என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.