

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்திருக்கிறார் சாய்பல்லவி.
'ப்ரேமம்' படத்தில் நடித்ததின் மூலமாக பிரபலமானவர் சாய் பல்லவி. அப்படம் தமிழக இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை கிடைத்ததைத் தொடர்ந்து, பல்வேறு தமிழ் இயக்குநர்களும் சாய் பல்லவியை தங்களது படத்தில் நடிக்க வைக்க அணுகினார்கள்.
மணிரத்னத்தின் 'காற்று வெளியிடை' படத்தின் நாயகிக்கு பேசப்பட்டு, பின்னர் அப்படத்தில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து சிவா - அஜித் இணையும் படத்தின் வாய்ப்பையும் தவிர்த்திருக்கிறார் சாய்பல்லவி.
அஜித் படத்துக்காக சிவா அணுகிய சில தினங்களுக்கு முன்பு தான், தெலுங்கில் சேகர் கமூலா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு மொத்தமாக தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சாய் பல்லவி. அதே தேதிகளை அஜித் படத்துக்கு சிவாவும் கேட்க, வேண்டாம் என்று தவிர்த்திருக்கிறார்.
தற்போது வரை சிவா - அஜித் படத்தின் நாயகி யார் என்பது இதுவரை முடிவாகவில்லை. காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பது உறுதியானாலும், இதுவரை அவரும் கையொப்பம் இடவில்லை. விரைவில் நாயகி யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.