

பாலாவின் படங்களுக்கு நான் பெரிய ரசிகன் என்று 'இறுதிச்சுற்று' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி குறிப்பிட்டார்.
சுதா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'இறுதிச்சுற்று'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இந்தியிலும் 'சாலா காதூஸ் (Saala Khadoos)' என்று பெயரில் படமாக்கி இருக்கிறார்கள். இரண்டு மொழிகளிலும் தயாரான இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் மற்றும் யு.டிவி நிறுவனம் இணைந்து வாங்கியிருக்கிறார்கள். ஜனவரி 29ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜனவரி 04) சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாலா படத்தின் இசையை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். இந்தி திரையுலகின் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
'இறுதிச்சுற்று' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி பேசும்போது, "வணக்கம். இங்கு பேசியவர்கள் எனக்காக ஆங்கிலத்தில் பேசினார்கள். எனக்கு தமிழில் 15 வார்த்தைகள் தெரியும். அதை வைத்துக் கொண்டு தமிழ் படம் பார்க்க முடியாது என்பதால் சப்-டைட்டில் போட்ட படங்களைப் பார்ப்பேன். இங்கிருப்பவர்கள் அனைவருக்குமே மொழி ஒரு தடையில்லை. அன்பு, பாசம், நட்பு வைத்திருக்கும் இவர்கள் பேசியது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மும்பையில் இருப்பவர்கள் காட்டும் அன்பை விட இன்று சென்னையில் நிறைய அன்பு கிடைத்தது.
ஒரு நாள் இரவு 11:30 மணி மாதவன் எனக்கு போன் செய்தார். எங்கியிருக்கிறீர்கள் என்று கேட்ட போது, வீட்டில் இருக்கிறேன் என்றேன். உங்களை இப்போது சந்திக்க முடியுமா என்று கேட்டார். எதுவும் முக்கியமான பிரச்சினையா என்று மாதவனிடம் கேட்ட போது, இல்லை உங்களிடம் பேச வேண்டும் என்றார். இரவு 12 மணிக்கு வந்து, 20 நிமிடத்தில் இப்படத்தின் அருமையான கதையைக் கூறினார். இப்படத்தின் உருவாக்கத்தில் மாதவனுக்கு இருந்த அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது. படம் தமிழ் மற்றும் இந்தியில் தயாராகிறது என்றார். அன்று முதல் சுமார் ஒன்றரை வருடம் இப்படத்தில் எனது பயணம் இருக்கிறது.
இயக்குநர் சுதா, தயாரிப்பாளர் சசிகாந்த், இசையமைப்பாளர் சந்தோஷ் என நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். பாடல் உருவாக்கத்திற்காக சந்தோஷின் வீட்டுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். அவருடைய வீட்டில் அருமையான சாம்பார் சாதம் கிடைக்கும். சென்னைக்கு வரும்போது எல்லாம் கண்டிப்பாக சாம்பார் சாதம் சாப்பிட சென்று விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
நாசர் சாரின் நடிப்புக்கு நான் பெரிய ரசிகன்.
இந்தி படங்களில் நிறைய தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். நிறைய நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் சென்னையிலும் மும்பையிலும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து படங்கள் பண்ண வேண்டும். சூர்யாவுடன் ஒரு நாள் மட்டும் ஒரு விளம்பரத்தில் பணியாற்றினேன். இங்கிருந்து ஹேமமாலினி, ஸ்ரீதேவி போன்ற நிறைய நாயகிகளை மும்பையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே போல இங்கிருந்து நிறைய நாயகர்களை அழைத்து செல்ல வேண்டும். பாலாவின் படங்களுக்கு நான் பெரிய ரசிகன்.
இப்படத்தின் மூலமாக சென்னையில் உள்ள நிறைய தொழில்நுட்ப கலைஞர்களின் நட்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலமாக இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன். இப்படம் கண்டிப்பாக வரவேற்பைப் பெறும்" என்று பேசினார்.
இவ்விழாவில் பேசிய சூர்யா, "தமிழ்நாட்டின் சொத்து மாதவன். என் வீட்டில் நான் நடித்த படமோ, கார்த்தி படமோ வெளியாகும் போது மாதவன் படம் வெளியானால் முதலில் மாதவன் படத்துக்கு போகலாம் என்று தான் சொல்லுவார்கள். அந்தளவுக்கு என் வீட்டிலேயே அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து தற்போது வரை எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்" என்று தெரிவித்தார்.