

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து உருவாகவுள்ள படத்தில், சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2', தெலுங்கில் த்ரிவிக்ரம் - பவன் கல்யாண் இணையும் படம் ஆகியவற்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி படமொன்றை இயக்க உள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின். இவர் பெரும் வரவேற்பைப் பெற்ற 'யவடு சுப்பிரமணியம்' படத்தின் இயக்குநர்.
இப்படத்தை தயாரிப்பாளர் அஸ்வின் தத் தயாரிக்கவுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தன்னுடைய மகள்கள் தயாரிக்கவுள்ள சாவித்திரி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், கதையை முன்நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.
தற்போது பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது படக்குழு.